

தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படம் 'வாரிசு'. ராஷ்மிகா மந்தனா, பிரபு, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்கிறார். படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், படம் பொங்கலுக்கு வெளியாகும் என புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு சமீபத்தில் உறுதி செய்தது.
இதனிடையே, வாரிசு குறித்து அதன் இயக்குநர் வம்சி சமீபத்தில் அளித்த பேட்டியில் சில தகவல்களை வெளியிட்டுள்ளார். தெலுங்கு இயக்குநர் என்பதால் இந்தப் படம் தெலுங்கு படமா அல்லது பைலிங்குவல் படமா என்ற சந்தேகம் இருந்ததுவந்தது. இதுபற்றி பேசிய இயக்குநர் வம்சி, "இது பக்கா தமிழ் படம். தோழா படம் பண்ணும்போது இரண்டு மொழிகளில் எடுத்தேன். கரோனாவுக்கு பிறகு மொழிகளுக்கான தடை என்பது உடைக்கப்பட்டுள்ளது. இப்போது ஒரு மொழியில் எடுக்கப்பட்டு பல மொழிகளில் டப் செய்யப்படுகிறது. ஆனால், வாரிசு படம் முழுக்க தமிழ் விருந்து." என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து விஜய்யுடன் இணைந்தது குறித்து தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு பேசியதை வெளிப்படுத்திய வம்சி, "இதில் மகேஷ் பாபுவுக்கு மிகப்பெரிய சந்தோசம். அவரிடம் பேசியபோது இந்தப் படம் எனக்கு மிகப்பெரிய வாய்ப்பு என்பதை சொல்லி சந்தோஷமடைந்தார்" என்று தெரிவித்தார்.