

மறைந்த கே.வி.ஆனந்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய பவன் இராஜகோபாலன் இயக்கியிருக்கும் படம் ‘விவேசினி’. பிராகிருத மொழிச் சொல்லான விவேசினி என்றால் ‘எதையும் அராய்ந்து பொருள் தேட விரும்பும் பெண்’ என்கிறார் பவன்.
படம் பற்றி பேசும்போது, “பேய்கள் உலவுவதால் பெண்கள் நுழைய தடை செய்யப்பட்டிருக்கும் காட்டுக்குள் சென்று உண்மைகளைக் கண்டறிய நினைக்கிறார் பகுத்தறிவு செயற்பாட்டாளர் ஜெயராமன். தவிர்க்க முடியாத காரணங்களால் அங்கு தன் மகள் சக்தியை அனுப்புகிறார். சக்திக்கு அங்கு திடுக்கிட வைக்கும் அமானுஷ்ய அனுபவங்கள் கிடைக்கின்றன. சாதாரண பெண்ணாக இருந்திருந்தால் அவள் நடுங்கியிருப்பாள். பகுத்தறிவாளரால் வளர்க்கப்பட்ட சக்தி கேள்விகள் எழுப்பி அவற்றுக்கான விடைகளைத் தேடி ஓடும் விவேசினியாக மாறுகிறாள்” என்கிறார் பவன்.
இதில், ஜெயராமனாக நாசர், சக்தியாக காவ்யா நடித்துள்ளனர். சென்னையில் நடைபெற்ற இந்தப் படத்தின் சிறப்புத் திரையிடலில், பேராசிரியர் அ.மார்க்ஸ், சுப. வீரபாண்டியன், வீ.அரசு, அ.மங்கை. வ.கீதா, ஓவியா, கொளத்தூர் மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அவர்கள் பரிந்துரைத்த திருத்தங்களைப் படத்தில் மேற்கொள்ள இருப்பதாகக் கூறியிருக்கிறார் இயக்குநர். நவம்பர் அல்லது டிசம்பரில் படத்தை வெளியிட உள்ளனர். பகுத்தறிவுக்கான இந்தப் படம் வெகுஜன மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில் உருவாக்கி இருக்கிறோம் என்கிறார் பவன்.