

தீபாவளிக்கு வெளியான 'சர்தார்', 'பிரின்ஸ்' படங்களை ஓரம்கட்டி விட்டு 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் வசூல் ரீதியாகவும், திரையரங்குகளிலும் மக்கள் கூட்டத்தை பெற்று வருகிறது.
இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' மற்றும் கார்த்தியின் 'சர்தார்' படங்கள் திரையரங்குகளில் வெளியாகின. இரண்டு படங்களும் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதில் 'சர்தார்' திரைப்படம் வெளியாகி 4 நாட்களில் ரூ.40 கோடி அளவில் வசூலைக் குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' படத்தை பொறுத்தவரை ரூ.30 கோடி அளவில் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த இரண்டு தீபாவளிப் படங்களும் வசூல் எண்ணிக்கையிலும், ரசிகர்களிடையேயும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத நிலையில், திரை ரசிகர்கள் மீண்டும் 'பொன்னியின் செல்வன்' படத்தின் பக்கமே திரும்பியுள்ளதை திரையரங்குகளின் முன்பதிவு நிலைமை உறுதி செய்கிறது.
'பொன்னியின் செல்வன்' வெளியாகி 25 நாட்களை கடந்துவிட்ட நிலையில், இன்றும் திரையரங்குகளில் ஹவுஸ்ஃபுல்லாகியுள்ளன. மேலும், படம் இதுவரை உலக அளவில் ரூ.480 கோடியை நெருங்கியுள்ள நிலையில், இன்னும் சில தினங்களில் படம் ரூ.500 கோடி வசூலை எட்டும் என கூறப்படுகிறது.