

லிஜோமோல் ஜோஸ், லாஸ்லியா நடித்துள்ள 'அன்னபூரணி' படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது. இதனை வெற்றிமாறன், ஜெயம் ரவி வெளியிட்டுள்ளனர்.
அறிமுக இயக்குநர் லயோனல் ஜோஸ்வா இயக்கத்தில் லிஜோமோல் ஜோஸ், லாஸ்லியா, மெட்ராஸ் ஹரிகிருஷ்ணன் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'அன்னபூரணி'. த்ரில்லர்-ட்ரமா பாணியில் உருவாகியுள்ள இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். பாடலாசிரியர் யுகபாரதி இப்படத்தின் பாடல்களை எழுதியதுடன் படத்திற்கான வசனங்களையும் எழுதியுள்ளார். மராத்தி ஒளிப்பதிவாளர் ஹெக்டர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
குடும்ப அமைப்பிற்குள் வாழும் ‘பூரணி’ , குடும்ப அமைப்பிற்கு வெளியே வாழும் ‘அனா’ ஆகிய இருவரின் பயணமே இந்தப் படம். பெண்கள் குடும்ப அமைப்பிற்குள் அனுபவிக்கும் சிரமங்களை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது என்று படக்குழு தெரிவித்துள்ளது. படத்தின் முதல் பார்வையை இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் ஜெயம் ரவி ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர். கதாபாத்திரங்களின் இயல்பையும், மாறுபட்ட கதைக்களத்தையும் வெளிப்படுத்தும்படியான ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்த நிலையில், இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. விரைவில் படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.