நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி இரட்டைக் குழந்தை விவகாரம் - நாளை அறிக்கை வெளியீடு

அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்
Updated on
1 min read

நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி இரட்டைக் குழந்தை விவகாரத்தில் நாளை அறிக்கை வெளியிடப்படும் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் விக்னேஷ் சிவன் - நடிகை நயன்தாரா தம்பதியினர் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்ற விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியின் குழந்தைகள் பிறந்த மருத்துவமனை கண்டறியப்பட்டது என்றும், தேவைப்பட்டால் அவர்கள் இருவரும் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள் என்றும் மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். இதனிடையே விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதியினர் விசாரணைக் குழுவிடம் அறிக்கை சமர்ப்பித்ததாக தகவல் வெளியானது. ஆனால், அந்தத் தகவல் சுகாதாரத்துறை அதிகாரிகளால் மறுக்கப்பட்டது.

இந்நிலையில், வாடகைத் தாய் விவகாரம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் இன்று சுகாதாரத்துறை விசாரணை நடத்தியுள்ளது. சுகாதாரத்துறை அதிகாரிகள் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் மருத்துவமனை நிர்வாகம் விதிகளை மீறி இருப்பது உறுதி செய்யபட்டுள்ளது.அதன்படி இன்று மருத்துவமனையின் நிர்வாகம் தரப்பில் விதிமீறல் குறித்து விளக்கம் பெறப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் விளக்கம் திருப்திகரமாக இல்லையெனில் மருத்துவமனை மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என முன்பே அமைச்சர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ''நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்ற விவகாரம் தொடர்பான விசாரணைக்குழு அறிக்கை நாளை மாலை வெளியிடப்படும்'' எனத் தெரிவித்துள்ளார். நேற்று விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதியினர் தீபாவளியை முன்னிட்டு தங்கள் குழந்தைகளுடன் வாழ்த்து கூறி வீடியோ வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in