ஐஸ்வர்யா ராஜேஷின் 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' ட்ரெய்லர் எப்படி?
ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள மலையாள ரீமேக்கான 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' திரைப்படத்தின் தமிழ் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
ஜியோ பேபி இயக்கத்தில் நிமிஷா சஜயன், சுராஜ் வெஞ்சரமூட் நடித்திருந்த படம் 'தி கிரேட் இந்தியன் கிச்சன்'. புதிதாகத் திருமணமான பெண் ஒருவர், பழமைவாதக் கொள்கைகளும் ஆணாதிக்கமும் நிறைந்த கணவரின் குடும்பத்தில் படும் கஷ்டங்கள், அவர் எடுக்கும் முடிவு ஆகியவற்றை சொல்லிய படம் இது.
நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான இந்தத் திரைப்படம் விமர்சகர்களிடமும், ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆணாதிக்கச் சிந்தனையால் பாதிக்கப்படும் ஒரு படித்த பெண்ணின் நிலையை அழுத்தமாக, யதார்த்தமாகக் காட்டியிருந்ததாகப் பாராட்டுகளைப் பெற்றது.
இந்நிலையில் இப்படத்தை தமிழில் ரீமேக் செய்துள்ளார் இயக்குநர் ஆர்.கண்ணன். நிமிஷா சஜயன் கதாபாத்திரத்தை தமிழில் ஏற்று நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். ஜெர்ரி சில்வெஸ்டர் வின்சென்ட் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார். சுராஜ் வெஞ்சரமூட் கதாபாத்திரத்தில் ராகுல் ரவீந்திரன் நடித்துள்ளார்.
இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
ட்ரெய்லர் எப்படி?
மலையாள படத்தை தமிழ் மக்களின் ரசனைக்கு ஏற்ப இயக்குநர் ஆர்.கண்ணன் மாற்றியிருப்பதை உணர முடிகிறது. ஐஸ்வர்யா ராஜேஷ் தனக்கான கேரக்டரில் பொருந்திப்போவது படத்தின் பலமாக இருக்கும் என தெரிகிறது. 'நீங்களெல்லாம் ஹோம் மினிஸ்டர்ஸ்மா' போன்ற வசனங்கள் கவனம் பெறுகின்றன. இருப்பினும் முழுப்படம் வெளியான பிறகு படம் ரீமேக்கிற்கு நியாயம் சேர்த்துள்ளதா என்பது தெரியவரும். படத்தின் வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
