

செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் நடிக்கவிருக்கும் படத்தின் நாயகியாக சாய் பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது படக்குழு.
'சர்வர் சுந்தரம்' படப்பிடிப்பு முடிவடைந்ததைத் தொடர்ந்து, 'ஓடி ஓடி உழைக்கணும்' மற்றும் 'சக்கப் போடு.. போடு ராஜா' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்கள். இதில் 'சக்கப் போடு போடு ராஜா' படத்தின் படப்பிடிப்பு ஈ.சி.ஆர் சாலையில் நடைபெற்று வருகிறது.
இவ்விரண்டு படங்களைத் தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் சந்தானம். இப்படம் முழுமையாக தகவல் தொழில்நுட்பத் துறையில் நிகழும் சம்பவங்களை முன்வைத்து திரைக்கதை அமைத்திருக்கிறார் செல்வராகவன்.
இப்படத்தை க்ளூ ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. இதன் முதற்கட்ட பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது படக்குழு. இதில் சந்தானம் நாயகியாக நடிப்பதற்கு சாய் பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது படக்குழு. விரைவில் அவர் ஒப்பந்தம் செய்யப்படுவார்கள் என்று படக்குழு சார்பில் தெரிவித்தார்கள். அடுத்தாண்டு இப்படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக முடிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.
செல்வராகவன் - சந்தானம் படம் மட்டுமன்றி, ராஜீவ் மேனன் - ஜி.வி.பிரகாஷ் படக்குழுவும் நாயகிக்கு சாய்பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.