

“நான் நடிச்ச படங்கள்ல காமெடி இருக்கும். அதைத் தாண்டி வேறு சில விஷயங்களும் இருக்கும். ஆனா, ரொம்ப சிம்பிளா, வில்லனோ, வன்முறையோ இல்லாம, ஓபனிங் பாடல் இல்லாம, ஜாலியா ஒரு படம் பண்ணலாம்னு யோசிச்சு உருவாக்குனது தான் ‘ப்ரின்ஸ்’. கொஞ்சம் புதுசா ட்ரை பண்ணியிருக்கோம்” என்கிறார் சிவகார்த்திகேயன்.
தமிழ், தெலுங்கில் வரும் 21-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தை ‘ஜாதி ரத்னாலு’ என்ற தெலுங்கு படத்தை இயக்கிய அனுதீப் இயக்கி இருக்கிறார். உக்ரைன் நடிகை மரியா, சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். படம்பற்றி பேசினார் சிவகார்த்திகேயன்.
ரொமான்டிக் காமெடி படம்தானா?
ரொம்ப சிம்பிளான கதை. ஒருபிரிட்டீஷ் பொண்ணை, இந்திய பையன்காதலிக்கிறதுதான் படம். திரைக்கதையில இயக்குநர் அனுதீப் கொடுத்திருக்கிற காமெடி ட்ரீட்மென்ட் புதுசா இருக்கும். அதாவது, ஒருத்தர் ஒன்னுசொல்வார், அவருக்கு ‘கவுன்டர்’ கொடுக்கிற மாதிரியோ, அல்லது சம்மந்தமே இல்லாத வேற விஷயத்தை சொல்ற மாதிரியோ இந்த காமெடி இருக்காது. அதுதான் இயக்குநர் அனுதீப்போட பலம்னு நினைக்கிறேன். கவலை மறந்து சிரிச்சுட்டு போற மாதிரி இருக்கும். காமெடி பண்றது ரொம்ப கஷ்டமான விஷயம். அதை சவாலா ஏத்துக்கிட்டு பண்ணியிருக்கோம்.
முதன் முறையா உங்க படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகுது...
ஆமா. வழக்கமா ஒவ்வொரு தீபாவளிக்கும் ரசிகனா படம் பார்த்திருக்கேன். எல்லா ஹீரோ படங்களையும் பார்த்திருவேன். சின்ன வயசுல இருந்தே அப்படித்தான். நடிகன் ஆன பிறகும் தீபாவளிக்குப் படம் பார்க்கிறது இனிமையான அனுபவமா இருக்கும். இந்த முறை,நான் நடிச்ச படமே தீபாவளிக்கு வர்றதுங்கறது ரொம்ப மகிழ்ச்சியாவும் உற்சாகமாகவும் இருக்கு.
இந்தப் படம் மூலமா தெலுங்குக்கும் போறீங்க...
இது தமிழ்ப் படம்தான். ஒரே மொழியில கவனம் செலுத்தி உருவாக்கி இருக்கிறபடம்தான் இது. தெலுங்குல டப் பண்ணியிருக்கோம். டைரக்டரும் தயாரிப்பாளரும் தெலுங்குங்கறதால அப்படிபேச்சு வந்திருக்கும்ன்னு நினைக்கிறேன். இதுக்கு முன்னாலயும் என் படங்கள் தெலுங்குல டப் ஆகியிருக்கு. இதுல என்னநல்ல விஷயம்னா, டைரக்டர்தெலுங்குங்கறதால, அந்த மொழியில டப் பண்றது ரொம்ப வசதியா இருந்தது.
உக்ரைன் நடிகை மரியா நடிச்சிருக்காங்களே...
கதைப்படி, கடலூர்லஇருக்கிற பையன், பாண்டிச்சேரியில இருக்கிறபிரிட்டீஷ் பொண்ணை காதலிக்கிறான். அதனால மரியாவை தேர்வு பண்ணினோம். கதையில, இரண்டுபேருமே ஆசிரியர்கள். நான்சோஷியல், அவங்க ஆங்கிலஆசிரியை. ஸ்கிரிப்ட்ல இருக்கிற வச னத்தை அவங்க மொழியில எழுதி வச்சுக்கிட்டு பேசி சிறப்பா நடிச்சாங்க மரியா. படத்துல தமிழ், ஆங்கிலம் சேர்ந்து பேசுவாங்க. தமிழ்ல பேசறதுக்கு ரொம்ப மெனக்கெட்டிருக்காங்க. படம் பார்க்கும்போது அது தெரியும்.
‘ப்ரின்ஸ்’ டைட்டில் ஏன்?
நிறைய தலைப்புகள் பேசிப் பார்த்தோம். டீச்சர் சம்மந்தப்பட்ட கதைன்னு அதுக்கு ஏற்ற மாதிரி தலைப்பு வைச்சா, சீரியஸ் படம் மாதிரி ஆயிடும்.எளிமையா எல்லாருக்கும் சேர்ற மாதிரி தலைப்பு வைக்கலாம்னு இதைத் தேர்வு பண்ணினோம். நல்லா ரீச் ஆகியிருக்கு.
இதுல என்ன மெசேஜ் சொல்றீங்க?
மனித நேயம். இன்னைக்குத் தேவையா இருக்கிற விஷயம் இது. ரொம்ப நேரடியா அப்படியே சொல்லலை. ஆனா, கதையோட இணைஞ்சு அது இருக்கும்.
ரிலீஸுக்கு முன்னாலயே ரூ.100 கோடி பிசினஸ் ஆனதா சொல்றாங்களே?
ஒவ்வொரு படம் பண்ணும்போதும் தயாரிப்பாளருக்கு ‘டேபிள் பிராஃபிட்’ வந்திரணும்னு நினைப்பேன். இந்தப் படம் எவ்வளவு பிசினஸ் ஆச்சுன்னு சரியா தெரியலை. ஆனா, பெரிய பிசினஸ் ஆகியிருக்கு. அந்தளவுக்கு தியேட்டர்கள்லயும் வசூல் பண்ணினா, இன்னும் மகிழ்ச்சியா இருக்கும்.
‘அயலான்’ எப்ப ரிலீஸ் ஆகும்?
அது சயின்ஸ் பிக்சன் படம். ரொம்ப புதுசா இருக்கும். கிராபிக்ஸ் வேலைகள் போயிட்டிருக்கு. அது முடிஞ்சதும் அடுத்த கோடை அல்லது ஜூலை மாதம் வெளியிடறதுக்கான முயற்சிகள் நடந்துகிட்டு இருக்கு.
அடுத்த படங்கள்?
அஸ்வின் மடோன் இயக்கும் ‘மாவீரன்’ ஷூட்டிங் போயிட்டிருக்கு. என் அடுத்த பட ரிலீஸ் அதுதான். பிறகு ‘அயலான்’. அடுத்து கமல் சாரோட ராஜ்கமல் தயாரிப்புல ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படம்னு அடுத்தடுத்து இருக்கு.