

விழா நாட்களில் பெரிய நாயகர்கள் படம் வெளியாவதற்குப் பதிலாக, சின்ன படங்கள் வெளியாக வழி செய்தால் சிறப்பாக இருக்கும் என்று 'கோடிட்ட இடங்களை நிரப்புக' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பார்த்திபன் பேசினார்.
பார்த்திபன் இயக்கத்தில் சாந்தனு, பார்வதி நாயர், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'கோடிட்ட இடங்களை நிரப்புக'.
சத்யா இசையமைத்திருக்கும் இப்படத்தை பார்த்திபன் தயாரித்திருக்கிறார். டிசம்பர் 4-ம் தேதி இசை வெளியீடு மற்றும் டிசம்பர் 23-ம் தேதி பட வெளியீடு என முடிவு செய்திருக்கிறார் பார்த்திபன்.
அப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பார்த்திபன் பேசுகையில், "எனக்கு சினிமாவைத் தவிர வேற பொழப்பு தெரியாது. அது 500, 1000 செல்லாமல் போனாலும் சரி, நாளைக்கே 2000 செல்லாம போனாலும் சரி, எனக்குத் தெரிந்தது சினிமா மட்டும் தான்.
'கோடிட்ட இடங்களை நிரப்புக' படத்தை நான் க்ரவுடு ஃபண்டிங் மூலமாக உருவாக்கி இருக்கிறேன். நிறைய தயாரிப்பாளர்கள் இந்த மாதிரி செய்யலாம், அந்த மாதிரி செய்யலாம் என வருவார்கள். காசோலை கொடுப்பார்கள். நானும் எதாவது ஒன்றிலாவது தப்பித்தவறி பணம் வந்துவிடும் என பார்ப்பேன். ஆனால், எல்லாம் காசோலையுமே பணமின்றி திரும்பிவிடும். அதனால் தான் இந்த க்ரவுடு ஃபண்டிங் முறையைத் தேர்வு செய்தேன். இதன் மூலம் பத்து பேர் இப்படத்தில் இணைந்துள்ளார்கள். இது ஒரு ஆரோக்கியமான விஷயம் என நினைக்கறேன்.
நான் இப்போது சில படங்களில் நடிக்கிறேன், நல்ல சம்பளம் வருகிறது. ஆனால் படம் இயக்கும் ஆசை மட்டும் போகவில்லை. சொகுசாக வாழ்வதற்குப் பிடிக்கவில்லை. எப்போதுமே ஒரு கடினமான பாதைதான் உங்களை அழகான இடத்துக்கு கொண்டு சேர்க்கும்.
எனக்கு தயாரிப்பாளர் சங்கத்திடம் ஒரே வேண்டுகோள்தான். இது இன்றைய நேற்றைய பிரச்சினை இல்லை. பல நாட்களாக பேசிக் கொண்டிருக்கிறோம். விழா நாட்களில் பெரிய நாயகர்கள் படம் வெளியாவதற்குப் பதிலாக, சின்ன படங்கள் வெளியாக வழி செய்தால் சிறப்பாக இருக்கும். ஏனென்றால் அஜித் படத்தை செவ்வாய்க்கிழமை வெளியிட்டால் கூட நான் திரையரங்கிற்கு சென்று பார்ப்பேன். ஆனால் சிறு படங்களின் நிலை அப்படியில்லை.
'கோடிட்ட இடங்களை நிரப்புக' படம் நன்றாக வந்திருக்கிறது. படம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது" என்று தெரிவித்தார் பார்த்திபன்.