

பழைய பார்முலா படி இனி படங்களை எடுக்க முடியாது என திரைப்பட இயக்குநர் பாண்டிராஜ் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்று வரும் உலகத் திரைப்பட விழாவின் 3-ம் நாள் நிகழ்ச்சியில் நேற்று இரவு கலந்துகொண்டு அவர் பேசியது: கரோனா காலத்துக்குப் பிறகு திரைப்பட ரசிகர்களின் மனநிலை நிறைய மாறியிருக்கிறது. இணையதளத்தில் நிறைய வெளிநாட்டுப் படங்களைத் தேடிப் பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
எனவே, திரும்பத் திரும்ப ஒரே வட்டத்துக்குள் படத்தை எடுத்து ஓட்ட முடியாது என்பதைப் புரிந்து கொண்டிருக்கிறோம். வேறு வேறு அனுபவங்களுக்கு மக்கள் தயாராகிவிட்டார்கள். படத்தின் தொடக்கத்தில் பாட்டு, அடுத்து ஒரு சண்டை காட்சி, அப்புறம் பாட்டு என பழைய பார்முலாபடி இனி திரைப்படம் எடுக்க முடியாது. புதிய புதிய உத்திகளைத் தேடி மக்களுக்குத் தர வேண்டும்.
இதுபோன்ற திரைப்பட விழாக்களை நடத்துவதுபோல, தமுஎகச போன்ற அமைப்புகள் சிறிய பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகளை உருவாக்கலாம். பல படங்களுக்கு தேர்வாகாமல் போனவர்களைக் கொண்டுதான் சுசீந்திரன் ‘வெண்ணிலா கபடிக் குழு' படத்தை எடுத்தார். பெரும்பாலானவர்கள் அதில் புதுமுகங்கள்தான். அந்தப் படம் நல்ல வெற்றியைத் தந்தது.
சுவர்களில் ஒட்டப்படும் போஸ்டர்களில் அரசியல் ஆர்வலர்கள் திரைப்பட போஸ்டர்களைப் பார்க்க மாட்டார்கள். திரைப்பட ரசிகர்கள் அரசியல் போஸ்டர்களைப் பார்க்க மாட்டார்கள். எனவே, அனைத்து தரப்பினரையும் ஈர்க்கும் வகையில் படங்களுக்கு தலைப்பிடவும், போஸ்டரை வடிவமைக்கவும் வேண்டும்.
ஒரு ஊரில் 200 உணவகங்கள் இருக்கின்றன என்றாலும், சில கடைகளுக்குத்தான் பிராண்ட் இருக்கிறது. அதுபோல, சில ஈர்ப்புகள் திரைப்படங்களுக்கும் தேவையாக இருக்கின்றன. ‘பசங்க' படம் எடுக்கும்போதும், ‘மெரினா' படம் எடுக்கும்போதும் முன்பே தலைப்பு தயாராகவில்லை. படம் எடுத்துக் கொண்டிருக்கும் போதுதான் இரு படங்களுக்கும் தலைப்பை வைத்தோம். நல்ல வரவேற்பும் கிடைத்தது என்றார்.