

கார்த்தி நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள 'சர்தார்' படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படம் 'சர்தார்'. பிரின்ஸ் பிக்சர் பேனரில் எஸ்.லக்ஷ்மன் குமார் தயாரித்துள்ள இப்படத்தில் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன், ஷங்கி பாண்டே, லைலா, முனீஷ்காந்த், முரளி சர்மா, இளவரசு ஆகியோர் நடித்துள்ளனர். படத்தில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.
ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது. தீபாவளியை முன்னிட்டு வரும் அக்டோபர் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது ரிலீசாகியுள்ளது.
ட்ரெய்லர் எப்படி? - 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்திற்கு பிறகு மீண்டும் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். விளம்பர பிரியராக தான் செய்யும் உதவியை மற்றவர்களுக்கு காட்ட வேண்டும் என நினைக்கும் கதாபாத்திரம் அவருடையது. மாறுப்பட்ட கெட்டப்புகளில் இம்முறை களமிறங்கியிருக்கிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் லைலா திரையில் தோன்ற இருக்கிறார்.
ட்ரெய்லர் முழுக்கவே கார்த்தி ஆக்கிரமித்திருக்கிறார். படத்திலும் அப்படித்தான் இருக்கும் என தோன்றுகிறது. உளவாளியை மையப்படுத்தி சொல்லப்பட்டிருக்கும் இக்கதையில் ஆக்ஷன், அதிரடிக் காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது என்பதை ட்ரெய்லர் உணர்த்துகிறது. போலவே, 'இரும்புத்திரை' படத்தைப்போல பல நுணுக்கமான விஷயங்களை இப்படத்திலும் பார்வையாளர்களுக்கு பி.எஸ்.மித்ரன் சொல்ல இருப்பதை ட்ரெய்லரின் சில காட்சிகள் வெளிப்படுத்துகின்றன. ட்ரெய்லர் வீடியோ: