“என் கரியரில் இது முக்கியமான படம்” - ‘சர்தார்’ குறித்து கார்த்தி பேச்சு

“என் கரியரில் இது முக்கியமான படம்” - ‘சர்தார்’ குறித்து கார்த்தி பேச்சு
Updated on
1 min read

''என் கரியரில் 'சர்தார்' படம் முக்கியமான படமாக இருக்கும் என நம்புகிறேன்'' என நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள 'சர்தார்' திரைப்படம் தீபாவளி அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் பி.எஸ்.மித்ரன், ''இந்தப் படத்திற்கு கடுமையான உழைப்பு தேவைப்பட்டது. அதற்கு நம்பிக்கை கொடுத்தது படத்தின் தயாரிப்பாளர் தான். இரவு, பகல் பாராமல் வேலைப்பார்த்திருக்கிறோம். நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், உதவி இயக்குநர்கள் என எல்லாரும் மொத்த உழைப்பை கொட்டியிருக்கிறோம்.

படத்தில் கார்த்தியை டார்ச்சர் செய்திருக்கிறேன். காரணம், பல கெட்டப்கள் படத்தில் உண்டு. கார்த்தியின் மெனக்கெடல் என்னையும் உந்தி தள்ளியது. ரஜிஷா விஜயன், ராஷிகண்ணா, லைலா, சிறப்பாக நடித்துள்ளனர். என்னுடைய முதல் பண்டிகை ரிலீஸ் படம் இது. சிறப்பாக வந்துள்ளது என நம்புகிறேன்'' என்றார்.

நடிகர் கார்த்தி பேசுகையில், ''மித்ரன் இயக்கத்தில் வெளியான 'இரும்புத் திரை' பார்த்த பிறகு எனக்கு வங்கியிலிருந்து வரும் எஸ்எம்எஸ் எனக்கு பயத்தை கொடுத்தது. அந்த அளவுக்கு அவரின் படம் தாக்கத்தை ஏற்படுத்தியது. அண்மையில் அவர் என்னிடம் ஒரு ஒன்லைன் கூறினார். அது எனக்கு பிடித்திருந்தது. ஸ்கிரிப்ட் எழுத சொன்னேன். எழுதி முடித்திவிட்டு புதிய வேடங்கள் கதைக்கு தேவையாக இருக்கிறது என்றார்.

அந்த வகையில் இந்தப் படம் என் கரியரில் முக்கியமான படமாக இருக்கும் என நம்புகிறேன். முதல் முறையாக வயதான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். அதற்காக மெனக்கெடல் தேவைப்பட்டது. பிகினி, சிக்ஸ்பேக் இல்லாத இந்தியன் ஸ்பை - த்ரில்லர் தான் 'சர்தார்'. படம் சுவாரஸ்யமாகவும், இன்டலிஜயன்ஸாகவும் இருக்க நிறையவே மெனக்கெட வேண்டியிருந்தது.

இந்தக் கதையை புரிய வைக்கவே நிறைய கஷ்டப்பட வேண்டியிருந்தது. 3 வருஷமாக உழைப்பை ஆவணப் படமாக்காமல், திரைப்படமாக்க உழைத்த மித்ரனின் உழைப்பு முக்கியமானதாக கருதுகிறேன். தீபாவளிக்கு வரும் படங்கள் எல்லோர் மனதிலும் நிலைத்து நிற்கும். அப்படி இந்தப் படம் வெளியாவதை மகிழ்ச்சியாக கருதுகிறேன். வந்தியத்தேவனுக்கு கொடுத்த பாராட்டுகளுக்கு இங்கே நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்'' என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in