

''நாம் எந்த இடத்தில் இருந்து வந்தோமோ அதை நான் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. ஏறிய ஏணியை மறந்துவிடக்கூடாது. சினிமா ராட்டினம் போல மேலேயும் போகும், அதேசமயம் கீழயும் வந்துவிடும்'' என ஆர்.கே.சுரேஷ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கௌசிக், அஞ்சலி நாயர் நடித்துள்ள 'காலங்களில் அவள் வசந்தம்' படத்தின் இசை வெளியிட்டு விழா நடைபெற்றது. ராகவ் இயக்கியுள்ள இப்படத்தை சி.வி.குமார் தயாரித்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ், ''யாரையும் காயப்படுத்த சொல்லவில்லை. இன்று காலையில் ஃபேஸ்புக்கில் வீடியோ ஒன்றைப் பார்த்தேன். அதில் நடிகை இந்துஜா நேர்காணல் ஒன்றில் பேசியிருந்தார். 'பில்லா பாண்டி' படத்தில் நான் தான் அவரை அறிமுகப்படுத்தினேன். அவருக்கு அது தான் முதல் படம்.
அப்போது தொடர்ந்து 4 படங்கள் என்னுடைய ஸ்டூடியோ 9 தயாரிப்பு நிறுவனத்தில் ஒப்பந்தமானார். இப்போது கூட 'நானே வருவேன்' படத்தில் நடித்திருக்கிறார். அந்த நேர்காணலில் இந்துஜாவிடம், 'நீங்கள் நடித்ததிலேயே மோசமான படம் எது?' என கேள்வி கேட்கிறார்கள். அதற்கு அவர், ''பில்லா பாண்டி'' என கூறியிருக்கிறார். அது ஒரு நல்ல கதைக்களம் கொண்ட படம். எனக்கு மிகவும் பிடித்த படம். இந்துஜாவிற்கு அப்படி இருக்க வேண்டும் என அவசியமில்லை.
நாயகிகளை பற்றி பேசும்போது எனக்கு இந்த சம்பவம் நினைவுக்கு வந்தது. ஆனால், நாம் எந்த இடத்தில் இருந்து வந்தோமோ அதை நான் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. ஏறிய ஏணியை மறந்துவிடக்கூடாது. சினிமா ஒரு பெரிய வட்டம். ஒரு ராட்டினம் போல சுற்றி கீழே வந்துவிடும். அதை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். சினிமாவில் ரஜினியைப்போல இருக்க வேண்டும். இன்றும் அவர் பண்புடன் நடந்துகொள்ளும் ஒரு நடிகர்'' என்று அவர் பேசினார்.