

நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் சரத்குமார், செயலாளர் ராதாரவி இருவரையும் நீக்கவதற்காக கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு யாருக்கு எதிர்ப்பு தெரிவிக்காததால் ஒரு மனதாக நிறைவேறியது. இதனைத் தொடர்ந்து இருவரும் நிரந்தரமாக நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்கள். இதற்கான கடிதம் விரைவில் அனுப்பப்பட இருக்கிறது.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 63வது பொதுக்குழு பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே நடிகர் சங்க வளாகத்தில் நேற்று 2 மணிக்கு கூடியது. இதில் வெளியூரிலிருந்து பல்வேறு நடிகர்கள் கலந்து கொண்டார்கள். இப்பொதுக்குழுவில் அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டார்கள். இதற்கு நடிகர் சங்கத்தின் சார்பில் பவுன்சர்கள் நியமிக்கப்பட்டு இருந்தார்கள். இதில் கடும் கெடுபடி இருந்தது. தமிழ்த்தாய் வாழ்த்துவுடன் தொடங்கப்பட்ட பொதுக்குழுவில் முதலில் செயலாளர் விஷால் வரவேற்புரை நிகழ்த்தினார். நூற்றாண்டு விழா கலைஞர்கள் எம்.ஜி.ஆர், எம்.ஆர்.ராதா உள்ளிட்டவர்களின் வீடியோ தொகுப்பு திரையிடப்பட்டது. ஏ.பி.நாகராஜன் பற்றிய புத்தகத்தை நடிகர் சிவகுமார் வெளியிட, இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் பெற்றுக் கொண்டார்.
முன்னாள் நிர்வாகிகள் மீது சராமரி குற்றச்சாட்டு: சரத்குமார், ராதாரவி நீக்கம்
இப்பொதுக்குழுவில் பொருளாளர் கார்த்தி பேசும் போது, "நடிகர் சங்க அறக்கட்டளையில் சரத்குமார் மற்றும் ராதாரவி இருவரும் தாங்களே நிரந்தர அறங்காவலர்கள் என நியமித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு யாருடைய ஒப்புதலையும் பெறவில்லை. இதனை மாற்றி எழுத ஒப்புதலைக் கோருகிறேன்" என்ற போது யாருமே எதிர்ப்பு தெரிவிக்காததால் ஒருமனதாக நிறைவேறியது.
அதனைத் தொடர்ந்து பேசிய செயலாளர் விஷால் "நல்லது செய்ய வேண்டும் என்று பொறுப்புக்கு வந்தோம். ஆனால், இங்கு நல்லது செய்வதற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. முந்தைய நிர்வாகம் செய்த கோளாறுகளை சரிசெய்ய மிகவும் கடினமாக இருக்கிறது. வழக்குகளை கையாள மட்டுமே பல லட்ச ரூபாய் செலவு செய்திருக்கிறோம். அதை வைத்து பல பேருக்கு உதவிகள் செய்திருக்கலாம். இந்த பொதுக்குழு தொடங்கும் போது வெளியே பெரிய சலசலப்பு ஏற்பட்டது. ஆனால், இதற்கெல்லாம் அஞ்ச மாட்டோம். 'விஷாலே நீ ஆம்பளயா' என்று கூடக் கேட்டார்கள். ஆம்பளயாக இருந்ததால் தான் இந்த இடத்தை மீட்டெடுக்க முடிந்தது. நீங்கள் தவறு செய்ததை ஆதாரத்துடன் சுட்டிக் காட்டி, உங்களை நீக்கினோம். சங்க அறங்காவலர்களாக உங்களை நீங்களே நியமித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதால் வேறு வழியின்றி உங்கள் மீது நடவடிக்கை எடுத்தோம். முன்னாள் நிர்வாகிகள் சரத்குமார், ராதாரவி இருவரையும் நிரந்தமாக நீக்க இந்தப் பொதுக்குழு அனுமதிக்க வேண்டும்" என்று கேட்டவுடன் அனைவருமே கைதட்டி தங்களுடைய ஆதரவைத் தெரிவித்தார்கள்.
அதனைத் தொடர்ந்து, "இப்பொதுக்குழு அனைத்து தரப்பிலும் ஒப்புதலுடன் தான் நடத்தப்பட்டது. இது சட்டரீதியான பொதுக்குழு. தவறு செய்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். அப்போது தான் அனைவருக்கும் பயம் வரும்" என்று பேசினார் விஷால்.
பொதுக்குழு வளாகத்தில் ரகளை
இப்பொதுக்குழு நடைபெறும் போது, எதிரணியைச் சேர்ந்தவர்கள் பொதுக்குழு அரங்கத்துக்குள் சென்று கோஷம் எழுப்பினார்கள். அவர்களை காவல்துறை அப்புறப்படுத்தி வெளியேற்றி கைது செய்தனர். அப்போது 'விஷால் ஒழிக', நடிகர் சங்கத்தில் ஊழல் நடைபெற்றுள்ளது' என்று கோஷம் எழுப்பினர். அதனைத் தொடர்ந்து அதிமுக எம்.எல்.ஏவும், நடிகர் சங்கத்தின் துணைத் தலைவர் கருணாஸின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. கண்ணாடியை உடைத்த மர்ம நபரை உடனடியாக பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். போலீஸார் அவரை கைது செய்தனர்.
முன்னாள் நடிகர்கள் கலந்து கொள்ளவில்லை
முன்னணி நடிகர்களாக ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா உள்ளிட்டவர்கள் கலந்து கொள்ளவில்லை. வடிவேலு, விக்ரம், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, சூரி ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னணி நடிகைகள் யாருமே இப்பொதுக்குழுவில் கலந்து கொள்ளவில்லை. நடிகைகள் எம்.என்.ராஜம், சரோஜா தேவி, சாரதா, சச்சு, ரேகா, அம்பிகா, சுஹாசினி, ரேவதி, மோனிகா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இப்பொதுக்குழுவில் கலந்து கொண்ட அனைத்து நடிகர்களுக்கும் மதிய விருந்து அளிக்கப்பட்டது. அதற்கான முழுச்செலவையும் நடிகர் அரவிந்த் சாமி ஏற்றுக் கொண்டுள்ளார். அதற்கு பொதுக்குழுவில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
விஷால் அலுவலகம் மீது தாக்குதல்
இப்பொதுக்குழு நடைபெற்று வரும் போது நடிகர் விஷால் அலுவலகம் மீது மர்ம நபர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். இதில் அவரது உதவியாளர்கள் காயமடைந்தனர். மேலும் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார் சேதம் அடைந்தது. இத்தாக்குதல் குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்க இருப்பதாகவும் விஷால் தெரிவித்தார்.