

'நயன்தாராவும், நானும் அம்மா, அப்பாவாகிவிட்டோம்' என இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நடிகை நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் 'நானும் ரவுடி தான்' படத்திலிருந்து ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். 6 ஆண்டுகளாக காதலர்களாக வலம் வந்த இருவருக்கும், கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி சென்னை மகாபலிபுரத்தில் திருமணம் நடைபெற்றது. இதில் நடிகர்கள் ஷாருக்கான், ரஜினிகாந்த், இயக்குநர் மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான், அட்லி, அனிருத் என திரையுலக பிரபலங்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே இதில் கலந்து கொண்டனர். இவர்களது திருமண வீடியோவை முன்னணி ஓடிடி நிறுவனமான நெட்ஃப்ளிக்ஸ் விரைவில் வெளியிட உள்ளது.
இந்நிலையில் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில், ''நயனும் நானும் அம்மா, அப்பா ஆகிவிட்டோம். இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன. முன்னோர்களின் ஆசீர்வாதங்களும், பிரார்த்தனைகளும் ஒருங்கிணைந்து இரட்டை குழந்தைகளின் வடிவத்தில் எங்களுக்கு கிடைத்துள்ளன. உங்கள் அனைவரின் ஆசீர்வாதமும் எங்களுக்கு வேண்டும். உயிர் மற்றும் உலகம்''என பதிவிட்டுள்ளார். பலரும் தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். வாடகைத்தாய் மூலம் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.