

பிஸ்தா திருமண விழா நடத்திக் கொடுக்கும் ‘வெட்டிங் பிளானர்’ தொழில் செய்பவர்களுக்கு மத்தியில், திருமணத்தை வெட்டி விடுவதை தொழிலாகச் செய்கிறார் சரவணன் (‘மெட்ரோ’ ஷிரிஷ்). இதில் பணத்துடன் பகையையும் சம்பாதிக்கும் அவர், குறிப்பிட்ட நாளுக்குள் திருமணம் செய்தே ஆகவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகிறார். காதலியும் (மிருதுளா முரளி) கைவிட்டுப்போன நிலையில், அவருக்குப் பெண் கிடைத்ததா? திருமணம் நடந்ததா? என்பது கதை.
ராஜேஷ்.எம், சுந்தர்.சி பாணி கலகலப்பு ஃபார்முலாவை முயற்சித்து முக்கால் கிணறு தாண்டியிருக்கிறார் இயக்குநர் எம்.ரமேஷ் பாரதி. நம்பகமான சம்பவங்களுடன் கற்பனையையும் அளவாகச் சேர்த்துக்கொண்டால் இதுபோன்ற கதைக்களங்கள், காமெடித் திருவிழாவாகக் களைகட்டிவிடும். இதில் கற்பனையின் அளவைச் சற்றே கூட்டி ரசிகர்களுக்குத் தண்ணிக் காட்டியிருக்கிறார்கள். குறிப்பாக, ‘குறிப்பிட்ட நாளுக்குள் திருமணம் செய்யாவிட்டால் குடும்பத்துக்கு ஆகாது’ என்பதை நம்பி, பெண்ணை முடிவு செய்யாமலேயே திருமண ஏற்பாட்டில் இறங்குகிறார் நாயகன். அப்படிப்பட்டவருக்கு, நாள் பார்த்து, நட்சத்திரம் பார்த்து ஏற்பாடு செய்யும் திருமணங்களைத் தடுப்பது தவறாகவே தெரியவில்லை என்பது, நெய்ப் பொங்கலுக்கு ‘சைடுடிஷ்’ கருவாட்டு ஊறுகாய் என்பது போல் நெருடல்.
நாயகனின் தொழில், அதனால் ஏற்படும் விளைவுகள், வரும் பிரச்சனை, அதை எதிர்கொள்ளும் விதம், எடுக்கும் முடிவு என தெளிவாக நகரும் திரைக்கதையில் ஆங்காங்கே தூவப்பட்டிருக்கும் இரட்டை அர்த்த வசனங்களை, நகைச்சுவை என நம்பியிருக்க வேண்டாம். அழகும் அப்பாவித்தனமும் இணைந்த கலவையாக, தனக்குத் தரப்பட்டக் கதாபாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்தி இருக்கிறார் சரவணனாக வரும் ‘மெட்ரோ’ ஷிரிஷ். காதல் காட்சிகள், பாடல், நடனம், சண்டை என கமர்சியல் நாயகனுக்குரிய இடங்களில் துறுதுறுப்பைக் காட்டிவிடுகிறார். காதலியின் நிபந்தனையை நிறைவேற்ற முடியாமல் கோபப்படும் இடம், கல்யாணம் ரத்தாகி பரிதாபமாக நிற்கும் தருணம் என சரியான இடங்களில் அழுத்தமாக நடித்திருக்கிறார்.
காதலியாக வரும் மிருதுளா முரளியின் நடிப்பில் குறை சொல்ல ஏதுமில்லை என்றாலும், பாடல் காட்சிகளுக்கான நாயகியாக தேங்கிவிடுவது பரிதாபம். இவர் தோழியாக வரும் அருந்ததி நாயர், கதையில் சட்டென்று முக்கியத்துவம் பெறும் கடைசி நிமிடங்களில் தனித்துக் கவர்கிறார். தாய்மாமனாக வரும், சதிஷ் உதிர்க்கும் ‘பன்ச்’கள் எதுவும் சிரிப்பை வரவழைக்கவில்லை. அவருக்குப் பதிலாக யோகிபாபு, லொள்ளு சபா சாமிநாதன் வரும் காட்சிகளில் திரையரங்கு கலகலக்கிறது.
தரண்குமாரின் ‘அழகுல ராசாத்தி’ பாடலும் பின்னணி இசையும் ஈர்க்கின்றன. கும்பகோணம் நகரத்தையும் அதைச் சுற்றியுள்ள பசுமையான பகுதிகளையும் கதையோடு ஒன்றி படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் எம்.விஜய். கதாநாயகனின் தொழிலைப் புதுமையாக அமைத்ததுபோல் அதனால் வரும் பிரச்சனைகளையும் புதுமையாக அமைத்திருந்தால் இன்னும் கவர்ந்திருப்பான் இந்த ‘பிஸ்தா’.