‘கலைஞர்கள் உணர்ச்சி வசப்படுபவர்கள்தான், ஆனால் அது பகையல்ல’ - கைகோர்த்த கே.பாக்யராஜ், ஆர்.கே.செல்வமணி
எதிரும் புதிருமாக இருந்த இயக்குநர் சங்கத் தலைவர் ஆர்.கே.செல்வமணியும் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தலைவர் கே.பாக்யராஜும் மனம் விட்டு பேசி, சங்க பிரச்னைகளைத் தீர்த்துள்ளனர். இதுபற்றி ஆர்.கே.செல்வமணியிடம் கேட்டபோது கூறியதாவது:
ஒரு படத்தின் கதையை, திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் மட்டும் பதிவு செய்ய வேண்டும் என்ற நடைமுறை இருக்கிறது. 10 வருடங்களுக்கு முன் இயக்குநர்கள் சங்க உறுப்பினர்கள், கதைகளைத் தங்கள் சங்கத்திலேயே பதிவு செய்ய கோரிக்கை வைத்தார்கள்.
இதுபற்றி 2012-ம் ஆண்டு பேசி, இயக்குநர்கள் சங்க உறுப்பினர்கள், இயக்குநர் சங்கத்திலேயே கதைகளைப் பதிவு செய்ய முடிவு செய்தோம். எழுத்தாளர்கள் சங்கத் தலைவராக அப்போதிருந்த விசு, அதுசரியாக இருக்காது என்றார். பிறகு இரு சங்கமும்குழு அமைத்து புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டோம். அதன்படி எழுத்தாளர்கள் சங்கத்தில் கதைபதிவுக்கான கட்டணம் பற்றி பேசி முடிவு செய்தோம். அந்த ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டது. இடையில், கதைப் பதிவுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டது. இது தொடர்பாக 2 சங்கத்துக்கும் கருத்து வேறுபாடு இருந்தன.இதற்கிடையே எழுத்தாளர்கள் சங்கத்தின் ஆணிவேராக உள்ள கதைப்பதிவை அங்கேயே பதிவு செய்யஒத்துழைக்கமாறு வேண்டுகோள் விடுத்தனர். இதையடுத்து பாக்யராஜுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம்.
எழுத்தாளர்கள் சங்கத்தில் உறுப்பினராவதற்குமுதலில் ரூ.4,000 கட்டணம் என இருந்தது. இயக்குநர்சங்கத்தில் இருந்து, அங்கு, இணை உறுப்பினர் ஆக வேண்டும் என்றால் அவர்களுக்குகட்டணத்தை ரூ.2000 ஆக குறைத்தோம். ஒவ்வொருவருடமும் அதைப் புதுப்பிக்க ரூ.2,500 கட்டவேண்டும் என்ற நிலை இருந்தது. அதைஒரே முறை கட்டினால் போதும் என்றும் கதைப்பதிவுக்கு 50 பக்கத்துக்குள் இருந்தால், ரூ.300என்றும் அதற்கு மேல் இருந்தால், ரூ.500என்றும் முடிவு எடுத்திருக்கிறோம். கதை புகார் பிரச்னை ஏதும் இருந்தால், அதை பெப்சியுடன் கலந்து பேசி முடிவெடுக்கலாம் என்ற உறுதிமொழியும் எடுக்கப்பட்டது. இவ்வாறு ஆர்.கே.செல்வமணி கூறினார்.
‘‘தமிழ்த் திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலின் போது, இருவரும் கடுமையாக மோதிக்கொண்டீர்களே?’’ என்று கேட்டபோது, ‘‘கலைஞர்கள் எப்போதும் உணர்ச்சிவசப்படுபவர்கள்தானே.ஆனால், அது பகையல்ல’’ என்றார். கே.பாக்யராஜும், ஆர்.கே.செல்வமணியும் பேசிக் கொள்ளவே மாட்டார்கள் என கூறப்பட்ட நிலையில்,இருவரும் இணைந்திருப்பது சினிமா வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
