முதல் 3 நாள் வசூல் - ‘வலிமை’, ’விக்ரம்’ படங்களை பின்னுக்குத் தள்ளிய ’பொன்னியின் செல்வன்’

முதல் 3 நாள் வசூல் - ‘வலிமை’, ’விக்ரம்’ படங்களை பின்னுக்குத் தள்ளிய ’பொன்னியின் செல்வன்’
Updated on
1 min read

உலக அளவில் படம் வெளியான முதல் 3 நாள் வசூலின் அடிப்படையில் பார்க்கும்போது 'பொன்னியின் செல்வன்' முதலிடம் பிடித்துள்ளது.

கல்கி எழுதிய வரலாற்றுப் புனைவான 'பொன்னியின் செல்வன்' நாவலை திரைப்படமாக்கியிருக்கிறார் இயக்குநர் மணிரத்னம். கார்த்தி, ஐஸ்வர்யா ராய், விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, சரத்குமார், பார்த்திபன் என பெரிய நடிகர் பட்டாளமே நடித்த இந்தத் திரைப்படம் நேற்று (செப்டம்பர் 30) திரையரங்குகளில் வெளியானது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ், சுபாஷ்கரனின் லைகா புரொட்க்‌ஷன்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்தது.

பான் இந்தியா முறையில் உருவான இப்படத்தின் இரண்டு பாகங்களின் பட்ஜெட் ரூ.500 கோடி எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், படம் முதல் நாள் வசூலாக உலகம் முழுவதும் ரூ.80 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. இதையடுத்து இரண்டாவது நாள் படம் ரூ.70 கோடியை நெருங்கிய நிலையில், மொத்தமாக இரண்டு நாட்கள் முடிவில். உலகம் முழுவதும் ரூ.150 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியானது. தற்போது படம் உலகம் முழுக்க ரூ.200 கோடியை வசூலித்துள்ளதாக லைகா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில், உலக அளவில் முதல் 3 நாள் வசூலை அடிப்படையாக கொண்டு பார்க்கும்போது, இந்தாண்டில் வெளியான பட வரிசையில், அஜித்தின் 'வலிமை' ரூ.123.52 கோடி வசூலித்துள்ளதாகவும், கமலின் 'விக்ரம்' ரூ. 125.57 கோடி வசூலானதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம் 'பொன்னியின் செல்வன்' முதல் 3 நாட்களில் மட்டும் ரூ. 202.87 கோடி வசூலித்துள்ளது. இந்தாண்டு வெளியான படங்களில் 3 நாள் வசூலில் விக்ரம், வலிமை படங்களை பின்னுக்கு தள்ளி முன்னேறியிருக்கிறது பொன்னியின் செல்வன்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in