

ஒரு படத்தின் விமர்சனத்துக்கு கால அவகாசம் கொடுங்கள் என்று 'கத்தி சண்டை' விழாவில் விஷால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சுராஜ் இயக்கத்தில் விஷால், தமன்னா, ஜெகபதிபாபு, வடிவேலு, சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'கத்தி சண்டை'. ஹிப் ஹாப் ஆதி இசையமைத்திருக்கும் இப்படத்தை நந்தகோபால் தயாரித்திருக்கிறார். கேமியோ பிலிம்ஸ் நிறுவனம் தமிழகமெங்கும் இப்படத்தை விநியோகம் செய்கிறது. நவம்பர் 18ம் தேதி வெளியீடாக இப்படம் திரைக்கும் வரவிருக்கிறது.
இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விஷால், வடிவேலும், இயக்குநர் சுராஜ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். தமன்னா, சூரி ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.
இவ்விழாவில் விஷால் பேசியது, "இயக்குநர் சுராஜிடம் எந்தவொரு கருத்துச் சொன்னாலும், ஈகோ இல்லாமல் ஏற்றுக் கொள்வார். இந்த படம் நான் பண்ணுவதற்கு முக்கிய காரணம் வடிவேலு அண்ணன். அவர் இல்லையென்றால் கண்டிப்பாக இந்தப் படம் செய்திருக்க மாட்டேன்.
ஒரு நடிகரிடம் தேதிகள் இல்லையென்றால், வேறொரு நடிகரிடம் போகலாம். அவரும் இல்லையென்றால் மற்றொருவரிடம் போகலாம். ஆனால், வடிவேலு இல்லையென்றால் வேறு யாரிடமும் போக முடியாது. அவருடைய தனித்தன்மைத் தான் அதற்கு காரணம். சுராஜ் என்னிடம் கதையைக் கூறியவுடன், வடிவேலு அண்ணன் பண்ணினால் நான் பண்றேன் என்று தான் கூறினேன்.
நான் எங்கு சென்றாலும் "வடிவேலு உங்கக் கூட நடிக்கிறாராமே... எப்போ வருகிறது படம்?" என்று தான் கேட்கிறார்கள். ஏன் என கேட்டபோது "எங்களுடைய வாழ்க்கையில் மன அழுத்தம் நிறைய இருக்கிறது. வீட்டிற்கு சென்றவுடன் தொலைக்காட்சியில் அரை மணி நேரம் காமெடி பார்த்தவுடன் தான் தூங்கவே சொல்வோம்" என்றார்கள். இந்தப் படத்தில் சூரியும் ஒரு முக்கிய கதாபாத்திரம் பண்ணியிருக்கிறார். மறுபடியும் வடிவேலு - சூரி இருவரும் எப்போது இணைந்து நடிப்பார்கள் என்பது தெரியாது.
இந்த படத்தில் ஒரு கருத்து இருக்கிறது, கண்டிப்பாக அது அனைவருக்கும் பிடிக்கும். நந்தகோபால் மாதிரியான தயாரிப்பாளர்கள் தமிழ் சினிமாவுக்கு தேவை. ஏனென்றால், முந்தைய படங்களின் பிரச்சினையால், இந்தப் படம் வெளியாகுமா என்ற நிலையிலேயே பாதி படங்கள் திரையுலகில் தள்ளிப் போய் கொண்டிருக்கிறது.
ஒரே ஒரு வேண்டுகோள். ஒரு படத்தை விமர்னம் பண்ணுவது ஒவ்வொருத்தருடைய கருத்து சுதந்திரம். ஆனால், படத்தின் முதல் காட்சி ஒடிக் கொண்டிருக்கும் போதே சில சமயங்களில் விமர்சனம் வந்துவிடுகிறது. இதை நான் குற்றமாக சொல்லவில்லை. ஒரு படத்துக்கு சில கால அவகாசம் வேண்டும். முதல் காட்சி முடிந்து அடுத்த காட்சி தொடங்குவதற்குள் ஒரு படத்தை விமர்சனம் மூலம் கிழிகிழி என்று கிழித்து தொங்கவிடுகிறார்கள்.
ஒரு சில படங்களும் அப்படி தான் இருக்கிறது. நடிகர் சங்கப் பொது செயலாளராக இல்லாமல் ஒரு நடிகனாக உங்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள். விமர்சனத்தை கொஞ்சம் தாமதமாக போட்டால் நன்றாக இருக்கும்" என்று தெரிவித்தார் விஷால்.