நானே வருவேன்: திரை விமர்சனம்
இரட்டையர்களான பிரபு, கதிர் (தனுஷ் 2 வேடம்), வெவ்வேறு குணாதிசயங்களைக் கொண்டவர்கள். இருவரும் ஒரே இடத்தில் இருந்தால் ஒருவர் உயிருக்கு ஆபத்து என்கிறார், ஜோதிடர். கொடூர எண்ணம் கொண்ட கதிரை, கோயிலில் விட்டுவிட்டுத் திரும்பி விடுகிறார் அம்மா. இது முன் கதை. இப்போது பிரபு, சென்னையில் மனைவி பாவனா (இந்துஜா), மகள் சத்யாவுடன் (ஹியா தவே) வசித்து வருகிறார். சத்யாவை அமானுஷ்ய சக்தி ஒன்று ஆட்டிப் படைக்க, அதில் இருந்து மகளை மீட்க நினைக்கிறார் தனுஷ். அந்த அமானுஷ்ய சக்தி, தனுஷிடம் கோரிக்கை ஒன்றை வைத்து, அதை நிறைவேற்றினால், மகளை விட்டுவிடுவதாகக் கூறுகிறது. அது என்ன கோரிக்கை? தனுஷ் அதை நிறைவேற்றினாரா? கதிர் என்ன ஆனார் என்பது மீதி கதை.
மிரட்டலான ஹாரர் - த்ரில்லர் கதையை கையில் எடுத்திருக்கிறார், இயக்குநர் செல்வராகவன். முதல் பாதியில்,அழகான குடும்பம், கொடூர அண்ணன், வசதியான சென்னை வழக்கை எனச் செல்லும் கதையில், ஆவி நுழைந்ததும் திரைக்கதையில் அமைதியாகப் பிடிக்கிறது, சூடு. ஆனால் யூகிக்க முடிகிற, லாஜிக்கே இல்லாத இரண்டாம் பாதியும் எந்த டச்சிங்கும் இல்லாமல், முடிந்திருக்கும் சம்பிரதாய கிளைமாக்ஸும் செல்வா படமா? என்றே கேட்க வைக்கிறது.
தனுஷ், 2 வேடங்களில் வித்தியாசம் காட்டி நடித்திருக்கிறார். அமைதி, சாந்தம், மகளிடம் பாசம் என பிரபு கேரக்டர் ஒரு பக்கம் நகர, வில்லத்தனக் கதிர் சிரித்துக்கொண்டே மிரட்டுகிறார். நீண்ட தலைமுடி, கையில் வில் என அவர் லுக்கே அதகளப்படுத்துகிறது. அந்த கேரக்டர்களுக்கு நடிப்பால் உயிர்கொடுத்திருந்தாலும் வலுவில்லாத திரைக்கதை, அந்த உழைப்பை வீணடித்திருக்கிறது.
தனுஷ்-களின் நடிப்புக்கு அசத்தலாக ஈடுகொடுத்திருக்கிறார், மகளாக வரும் ஹியா தவே. பேயை கண்டு நடுங்குவது, அதோடு பேசுவது, தூக்கமின்றி தவிப்பது என பயந்த சிறுமியின் உணர்ச்சிகளை இயல்பாகக் கொண்டு வந்திருக்கிறார்.
குறைவான நேரமே வந்தாலும் வாய்பேச முடியாத கேரக்டரை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார், இந்தி நடிகை எல்லி அவ்ரம். தனுஷின் இன்னொரு முகம் தெரிந்ததும் உடலில் தொடரும் பதற்றம், தங்களை விட்டுவிடும் படி கெஞ்சும் பயம் என பரிதாபம் அள்ளுகிறார்.
மனைவி இந்துஜா, மனநல மருத்துவர் பிரபு, சூப்பர்வைசர் யோகிபாபு, சரவண சுப்பையா, ஒரே காட்சியில் வரும் செல்வராகவன் உட்பட அனைவரும் தங்கள் வேலையை சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவில் டாப் ஆங்கிளில் தெரியும் காடு, சிலிர்க்க வைக்கிறது. யுவன் சங்கர் ராஜாவின் இசை, த்ரில்லர் கதைக்கான பயத்தையும் படபடப்பையும் கொடுக்க கடினமாக உழைத்திருக்கிறது.
எந்த இடத்திலும் பார்வையாளரை ஆச்சரியப்படுத்தாத இரண்டாம் பாதியையும், பலவீனமான திரைக்கதையையும் சரி செய்திருந்தால், ‘நானே வருவேன்’ ரசிக்க வைத்திருக்கும்.
