

நடந்தது பொதுக்குழுவே அல்ல. அது ஒரு விழா அவ்வளவுதான் என்று நடிகர் சங்கத்தின் முன்னாள் செயலாளர் ராதாரவி தெரிவித்தார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்திலிருந்து சரத்குமார் மற்றும் ராதாரவி இருவரையும் நிரந்தரமாக நீக்கியிருக்கிறார்கள். நேற்று நடைபெற்ற பொதுக்குழுவில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டிருப்பது குறித்து ராதாரவி "சரத்குமாரையும், என்னையும் நிரந்தரமாக நீக்கியிருப்பதாக தற்போதைய செயலாளர் விஷால் கூறியிருக்கிறார். முதலில் நடந்தது பொதுக்குழுவே அல்ல. அது ஒரு விழா அவ்வளவுதான். நிதானமாக நடத்திய பொதுக்குழு கூட்டத்திலே தவறு பண்ணியிருக்கிறார்கள். 3500 பேருக்கு அழைப்பு விடுத்துவிட்டு, 800 பேர் அமரக்கூடிய அரங்கில் நடத்தினீர்கள். இதைக் கேட்டால் நான் லயோலாவில் படித்தேன் என்கிறார்.
இந்த முடிவு எங்கள் மீது அவர்கள் கொண்டிருக்கும் காழ்ப்புணர்ச்சியைக் காட்டுகிறது. நடிகர் சங்க அறக்கட்டளைக்கான இடத்தைக் காணவில்லை என்கிறார்கள், முதலில் அதை நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும்.தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து விஷாலை நீக்கியிருக்கிறார்கள். கேள்வி கேட்டால் நீக்குகிறார்கள் என்று சொல்கிறீர்கள். அதே போல நீங்களும் கேள்வி கேட்ட பலரை நீக்கவில்லையா? இந்த நீக்க முடிவை நான் சட்டப்படி சந்திக்க தயாராக இருக்கிறோம்" என்று தெரிவித்திருக்கிறார் ராதாரவி.