நிரந்தர நீக்கம் ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல: சரத்குமார்

நிரந்தர நீக்கம் ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல: சரத்குமார்
Updated on
1 min read

நடிகர் சங்கத்திலிருந்து நிரந்தரமாக நீக்கியிருக்கிறோம் என்று கூறியிருப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல என்று சரத்குமார் தெரிவித்திருக்கிறார்.

தென்னிந்திய நடிகர் சங்கத்திலிருந்து சரத்குமார் மற்றும் ராதாரவி இருவரையும் நிரந்தரமாக நீக்கியிருக்கிறார்கள். நேற்று நடைபெற்ற பொதுக்குழுவில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டிருப்பது குறித்து சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்திருக்கிறது என்று கூறியிருப்பது விதிகளின் படி சரியானதா என்ற கேள்வி ஒரு புறம் இருக்க, அந்த கூட்டத்தின் வாயிலாக எங்களை நிரந்தரமாக நீக்கியிருக்கிறோம் என்று கூறியிருப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல.

தற்காலிக நீக்கம் செய்திருப்பதை எதிர்த்து நாங்கள் தொடுத்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, நிரந்தர நீக்கம் என்று கூறுவது சட்டத்திற்கு உட்பட்டதல்ல.

என்னை இன்று தொடர்புகொண்டு தங்களது உணர்ச்சிகளையும், உணர்வுகளையும் பகிர்ந்து கொண்ட ரசிகர்களுக்கும் இயக்கத்தின் சகோதர, சகோதரிகளுக்கும் நன்றி. அவர்களின் இந்த தன்னிச்சையான முடிவை சட்டத்தின் வாயிலாக நீதி மன்றத்தில் முறையிட்டு தீர்வு காண்போம்.

எனவே எனது அன்புக்கினிய ரசிகர்களும், தொண்டர்களும் எந்த ஒரு பதற்றமும் கொள்ளாமல் அமைதியாக இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வழக்கை முடித்துவைத்த உயர் நீதிமன்றம்

சரத்குமார், ராதாரவி இருவரும் தற்காலிகமாக நீக்கப்பட்ட போது, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தனர். ஆனால், நேற்று நடைபெற்ற பொதுக்குழுவில் சரத்குமார், ராதாரவி இருவரையும் நிரந்தரமாக நீக்கியிருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து சரத்குமார், ராதாரவி இருவரும் தற்காலிமாக நீக்கப்பட்டதற்கு தாக்கல் செய்த வழக்கை முடித்துவைத்தது உயர் நீதிமன்றம். மேலும், நிரந்தரமாக நீக்கப்பட்டு இருப்பதால் புதிய வழக்கைத் தொடர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in