பிறந்தநாள் பகிர்வு | மாபெரும் பாத்திரங்களில் நடித்தது என் பாக்கியம்! - சுதந்திர பொன்விழா கொண்டாட்டத்தில் நெகிழ்ந்த சிவாஜி

பிறந்தநாள் பகிர்வு | மாபெரும் பாத்திரங்களில் நடித்தது என் பாக்கியம்! - சுதந்திர பொன்விழா கொண்டாட்டத்தில் நெகிழ்ந்த சிவாஜி
Updated on
1 min read

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 94-வது பிறந்தநாள் இன்று. இதை, உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்தியாவின் 50-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, ரஷ்ய கலாச்சார மையம் நடத்திய பாராட்டு விழாவில், நடிகர் சிவாஜி கணேசன் பேசியதில் இருந்து ஒரு பகுதி இங்கே...

‘தில்லானா மோகனாம்பாள்’ படம் ரஷ்யாவில் திரையிடப்பட்டபோது, அந்நாட்டினர் இது வடநாட்டில் தயாரிக்கப்பட்ட படம் என்று நினைத்துக் கொண்டனர். ரஷ்யா மட்டுமல்ல, எல்லோருக்குமே இந்தியா என்றால் வடநாடுதான் தெரியும். தமிழ்நாட்டை பற்றி ஒன்றும் தெரியாது. நான் இந்தியன். இந்தியாவில்தான் தமிழ்நாடு இருக்கிறது என்பதை உணர்ந்தவன். அரசியலில் இருந்து தூக்கி எறியப்பட்டவன் நான். அரசியலுக்கு லாயக்கில்லை என்று வெளியே வந்தவன் நான். அதனால்தான் இங்கு அரசியல் பேசவில்லை.

மக்கள் ஒழுங்கான பாதையில், சாத்வீகமான பாதையில் செல்ல வேண்டும் என்று சொன்னால், நம்மை அழைத்துச் செல்லும் தலைவர்கள் ஒழுங்காக இருக்க வேண்டும். அப்போதுதான் மக்கள் ஒழுங்காக இருப்பார்கள். நம் நாட்டில் ஒரு பழமொழி உண்டு, ‘யதா ராஜா, ததாப்ரஜா’ என்று. தலைவன் எவ்வழியோ, அவ்வழிதான் மக்கள். தலைமை ஏற்றிருப்பவர்கள் நம்மை ஒழுங்காக நடத்திச் செல்ல முடியவில்லை; ஆகையால் நான் ஒழுங்காக நடந்துகொள்ள முடியவில்லை.

என் தகப்பன் என்னை கண்டித்து வளர்த்தால்தானே, நான் ஒழுங்காக நடப்பேன். என் தகப்பன் எனக்கு நல்ல வழியை காட்டினால்தானே நான் மக்களோடு இணைந்து வாழ்வேன். நம் முன்னோர்கள் நம்மை ஒழுங்காக நடத்தவில்லை. அதனால்தான் நாம் இஷ்டப்படி இருக்கிறோம். ஆகையால்தான் நம் கவிஞர் (வைரமுத்து) இங்கே சொன்னதைபோல, நமக்கு சுதந்திரம் வாங்கிக்கொடுத்த தலைவர்களை எல்லாம் 50 ஆண்டுகளுக்கு பிறகும் ஞாபகப்படுத்த வேண்டியிருக்கிறது என்பதை, கவிஞன் என்ற முறையில் சொன்னாரோ, இந்தியனாக சொன்னாரோ, சுதந்திரம் பெற்ற நாட்டிலே இருக்கிறோம் என்று சொன்னாரோ எனக்குத் தெரியாது.

எனக்கு வீட்டிலே ‘நல்ல’ பெயர் ஒன்று இருக்கிறது. ‘‘இவன் பொறந்தான், அப்பனைத் தூக்கி ஜெயில்ல வச்சான்’’ என்று. அவ்வளவு நல்ல பெயர், நல்ல ராசி எனக்கு. அதுக்கு நாலஞ்சு வருஷத்துக்குப் பிறகுதான் எங்கப்பா வந்தப்ப எனக்கு விவரம் தெரியும். ‘‘இதுதான் உங்க அப்பா’’ன்னு அம்மா, என்கிட்ட அறிமுகப்படுத்தினாங்க. எங்கம்மா சொல்லிதான் எனக்கு எங்கப்பாவே தெரியும்.

சுதந்திரத்தை பற்றி எனக்கு நன்றாக தெரியும். அதற்காக பாடுபட்ட, பாடிய, வசனம் பேசிய கலைஞர்களில் நானும் ஒருவன். சுதந்திரப் போராட்டத்தில் எனக்கு பங்கு கிடையாதே தவிர, சுதந்திரப் போராட்டத்திலே பங்குபெற்று அழிந்துபோன குடும்பத்திலே பிறந்தவன் என்ற பெருமை எனக்கு இருக்கிறது. இந்த நாட்டுக்காக அழித்துக்கொண்ட குடும்பத்தில் பிறந்தவன் என்று பெருமைப்படுகிறேன்.

சுதந்திரம் வாங்கிக்கொடுத்த, கப்பலோட்டிய தமிழனைப் போன்ற பெரிய பெரிய பாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பு, பாக்கியம் எனக்கு கிடைத்திருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in