

'சூரரைப்போற்று' படம் பலருக்கும் நம்பிக்கை கொடுத்த படம்' என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
கடந்த 2020-ஆம் ஆண்டிற்கான 68-வது தேசிய விருது பட்டியல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இதற்கான விருது வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு தலைமை தாங்கிய குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு விருதாளர்களுக்கு தேசிய விருதுகளை வழங்கினார். தமிழ் சினிமா சார்பில், சூர்யா நடிப்பில் வெளியான 'சூரரைப்போற்று' திரைப்படத்திற்கு ஐந்து விருதுகளும், 'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' திரைப்படத்திற்கு மூன்று விருதுகளும், 'மண்டேலா' திரைப்படத்திற்கு 2 விருதுகளும் அறிவிக்கப்பட்டது.
அந்த வகையில் 'சூரரைப்போற்று' படத்திற்காக நடிகர் சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வழங்கினார் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு. இந்நிலையில் விருது பெற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சூர்யா, ''மனதிற்கு மிகவும் நிறைவாக இருக்கிறது. மகிழ்ச்சியாக இருக்கிறது. 68-வது தேசிய விருது தேர்வு குழுவுக்கும், இந்திய அரசாங்கத்திற்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். ஒரே வருடத்தில் சூரரைப்போற்று 5 விருதுகளை வென்றிருக்கிறது.
சுதா கொங்கராவுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. 13 வருடங்களுக்குப்பிறகு தமிழ் படத்திற்கு தங்கத்தாமரை விருது பெற்று கொடுத்திருக்கிறார். எனக்கு முக்கியமான படமாக சூரரைப்போற்று அமைந்துள்ளது. கரோனா காலக்கட்டத்தில் எல்லாருக்கும் பெரிய பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளது. அப்படியான சூழலில் நிறைய பேருக்கு இந்தப்படம் நம்பிக்கை கொடுத்துள்ளது என்றனர். கரோனாவால் திரையரங்கில் வெளியிட்டு கொண்டாட முடியாத தருணங்கள் இருந்தன. ஆனால், ஒரு படத்திற்கு 5 விருதுகள் கிடைப்பது சாதாரணம் கிடையாது. என்னுடைய ரசிகர்களுக்கு இந்த விருதை சமர்பிக்கிறேன்'' என தெரிவித்துள்ளார்.