Published : 29 Sep 2022 10:07 PM
Last Updated : 29 Sep 2022 10:07 PM

இளையராஜாவுடன் இசையிரவு 3 | ‘இதயம் ஒரு கோயில்’ - எனை ஆளும் ஆருயிர் ஜீவன்!

நீண்ட பயணங்களில் நம் அனுமதி எதுவுமின்றி, சில்லென்று வீசும் காற்றும் நம்முடன் சேர்ந்தே பயணிக்கத் தொடங்கி விடுகின்றன. தூரத்தில் இருந்தபடியே நம் வாகனங்களைத் துரத்தும் நிலாவை வம்பிழுக்கத்தபடி, மெல்லிய ஒலியில் வரும் இளையராஜாவின் பாடல்களைக் கேட்டுக்கொண்டே பயணிக்கும் எல்லா பயணங்களும் சுகமானதே.

பெரும்பாரங்களைச் சுமந்து செல்லும் வாகன ஓட்டிகளுக்கும், ஆயிரக்கணக்கான பயணிகளை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பாதுகாப்பாக அழைத்து செல்லும் பேருந்து ஓட்டுநர்களுக்கும் தங்கள் எதிரே சூழ்ந்திருக்கும் இருளை விரட்ட தங்கள் கைவசமிருக்கும் பேராயுதம் இசை மட்டுமே. இந்த பயணங்களின்போது மட்டுமின்றி, இதற்குமுன் எத்தனை முறை கேட்டிருப்பார்கள் என்று தெரியாது. ஆனால், திரும்பதிரும்ப வரும் அந்தப் பாடல்களும், பாடலினூடே வரும் இசைக்கோர்ப்புகளும் அவர்களை ஏதோவொரு வகையில் மீண்டும் மீண்டும் புத்துணர்வுடன் மீட்டுக்கொண்டேயிருக்கிறது. ஏதோவொரு ஆறுதலை தொடர்ந்து தந்துகொண்டேயிருக்கிறது.

இப்போது மனதுக்கு பிடித்த பாடல்களைக் கேட்பதெல்லாம் சொற்பமான விஷயமாகிவிட்டது. நினைத்த மாத்திரத்தில், வேண்டிய பாடலைக் கேட்டு லயிக்கும் வாய்ப்பை இணையம் எளிதாக்கிவிட்டது. பாடல்களை கேசட்டில் பதிவு செய்து கேட்கும் பழக்கம் புழக்கத்தில் இருந்த சமயத்தில், 'மியூசிக்கல்ஸ்' கடைக்குச் செல்வது அத்தனை சிறப்பான அனுபவம்.

அந்தக் கடையின் பெயர் பலகையிலோ அல்லது கடையினுள் பிரேம் போட்டு வைத்த இளையராஜா படங்கள் இல்லாத கடைகளே இருக்காது என்று சொல்லலாம். கடையில் இருக்கும் விதவிதமான பாடல் பதிவு சாதனங்கள் எப்படியாவது இதுபோல ஒன்றை வாங்கி ராஜாவின் பாடல்களைக் கேட்டு ரசித்துவிட வேண்டும் என்று நினைக்க மறந்த மனங்கள் இருப்பது சாத்தியமற்றது.

அதைவிட சிறப்பாக இருப்பது படங்கள் மற்றும் பாடல்களின் விவரங்கள் அடங்கிய "கேட்லாக்" தான். அதில் எழுதப்பட்டிருக்கும், ஸ்டைலான தமிழ் எழுத்துக்கள் நம்மை ஏதோ செய்யும். அதைவிட, பதிவு செய்யப்பட்ட கேசட்டின் முகப்பில் உள்ள சின்ன இடைவெளிகளில் பாடல் குறித்த விவரங்களை விவரிக்கும் அழகிய கையெழுத்துக்கள் அந்த கேசட்டையே பார்த்துக்கொண்டிருக்கச் செய்யும்.

இந்த விவரிக்க முடியாத சுகத்தை அனுபவித்த பலர், ஒரு கேசட்டில் ஒரு படத்தின் அனைத்துப் பாடல்களையும் ஒரு பக்கம் முழுவதும் கட்டாயம் பதிவு செய்திருப்பர். சிலர் கேசட்டின் இரண்டு பக்கங்களிலும்கூட ஒரே படத்தின் பாடல்களை பதிவு செய்திருப்பர். அப்படி பதிவு செய்யும் அளவுக்கு ஒர்த்தான படம்தான் ‘இதயக்கோயில்’. இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் 1985-ம் ஆண்டு வெளிவந்தது.

இப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் வரிதான் இயக்குநர் மணிரத்னம், தமிழ் சினிமா ரசிகர்களின் ஆல்டைம் பேஃவரைட் படங்களில் ஒன்றான 'மௌன ராகம்' படத்தை இயக்க காரணமாக அமைந்தது. தற்போது நாம் பார்க்கப்போகும் பாடல், ' இதயம் ஒரு கோயில்'. இப்பாடலின் மற்றொரு சிறப்பு, பாடலை எழுதியவர் இளையராஜா. ஒரிஜினல் கேசட்டில் இளையராஜா குரலில் இந்தப் பாடல் இடம்பெற்றிருக்கும். படத்தில் எஸ்பிபி பாடியிருக்கும் பாடலே வரும்.

இந்தப் பாடல் ஒலிக்காத ஊர்த்திருவிழாக்கள், பேருந்து பயணங்கள், கல்யாண கச்சேரிகள், ரேடியோக்களே இருக்கமுடியாது என்று சொல்லுமளவுக்கு, இப்பாடல் மெச்சத்தகுந்தது. எஸ்பிபி குரலில் இரு முறையும், இசைஞானி இளையராஜா குரலில் ஒருமுறையும் இப்பாடல் வரும். ராஜா பாடியது கேசட்டில் மட்டுமே வரும்.

இந்தப் பாடலில் எஸ்.ஜானகியின் குரலில் வரும் ஹம்மிங் மட்டும் கேட்டாலே போதும் என்றளவுக்கு மட்டுமே இப்பாடலை ரசிப்பவர்கள் ஏராளம் . இந்தப் பாடலை "ஆடிடும் தென்னங்கீற்று" என்பது போன்ற வரிகளை ஏற்க மறுத்த இளையராஜா, ஒரு தேவியை (சாமி) குறித்து பாடுவதுபோல் இந்தப் பாடலை எழுதியதாக பல மேடைகளில் கூறியிருப்பார்.

"ஆத்ம ராகம் ஒன்றில்தான் ஆடும் உயிர்கள் என்றுமே
உயிரின் ஜீவ நாடிதான் நாதம் தாளம் ஆனதே
உயிரில் கலந்து பாடும்போது எதுவும் பாடலே
பாடல்கள் ஒரு கோடி எதுவும் புதிதில்லை
ராகங்கள் கோடி கோடி எதுவும் புதிதில்லை
எனது ஜீவன் நீ தான் என்றும் புதிது" என்று முதல் சரணத்தை எழுதியிருப்பார்.

இரண்டாவது சரணத்தில்,

"காமம் தேடும் உலகிலே கீதம் என்னும் தீபத்தால்
ராம நாமம் மீதிலே நாதத் தியாகராஜரும்
ஊனை உருக்கி உயிரில் விளக்கு ஏற்றினாரம்மா
அவர் பாடலின் ஜீவன் அதுவே அவரானார்
என் பாடலின் ஜீவன் எதுவோ அது நீயே
நீயும் நானும் ஒன்று தான் எங்கே பிரிவது"

ஒரு தேவியின் மீது பற்றுக்கொண்டு பாடுவது போல, நாயகி குறித்து பாடலை எழுதியிருப்பார். மொத்தம் மூன்று சரணங்களைக் கொண்டது இந்த பாடல். அதுவும் முதல் சரணத்திற்கு முன்வரும் இடையிசையில் வீணையுடன், புல்லாங்குழல் சேரும்போது, ஜானகியின் குரலில் வரும் லலலலா லலலலலா லலலலா முடிந்து வயலின் மழைச்சாரலாய் எழும் நொடியில் புல்லரித்துப்போகும். ராஜாவின் இசைமாமழை நாளையும் சூளும்....

'இதயம் ஒரு கோயில்' பாடல் இணைப்பு இங்கே

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x