Last Updated : 29 Sep, 2022 01:09 PM

1  

Published : 29 Sep 2022 01:09 PM
Last Updated : 29 Sep 2022 01:09 PM

நானே வருவேன் Review: ஆச்சரியங்கள் பாதி... ஏமாற்றங்கள் மீதி!

மகளுக்காக எதையும் செய்யும் தந்தை ஒருவரின் இறுதிக்கட்ட போராட்டம் வென்றதா, இல்லையா என்பதுதான் படத்தின் ஒன்லைன். தனது மனைவி, மகளுடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் பிரபு (தனுஷ்). பாசக்கார தந்தையான அவருக்கு மகள் தான் உலகம். திடீரென ஒருகட்டத்தில் அவரது மகளின் நடவடிக்கைகளில் வழக்கத்துக்கு மாறான மாற்றங்கள் தென்படுகின்றன. இரவில் தூங்காமல் தனியாக பேசிக்கொண்டிருக்கும் தனது மகளின் வித்தியாசமான போக்கைக் கண்டு மனமுடைந்து போகும் பிரபு, அவரை அதிலிருந்து மீட்க போராடுகிறார். அப்படியான போராட்டத்தில் இறுதியில் அவர் தன் மகளை மீட்டாரா? இல்லையா? அவருக்குள் இருக்கும் பிரச்சனை என்ன? இதற்கெல்லாம் பின்புலமாக இருக்கும் கதை என்ன? - இவற்றை ஹாரர் - த்ரில்லர் பாணியில் சொல்லியிருக்கும் படம்தான் 'நானே வருவேன்'.

'வீரா சூரா தீரா வாடா' என்ற பாடல் ஒலிக்க ஸ்லோமோஷனில் தனுஷ் நடந்து வரும் காட்சி திரையரங்கை தெறிக்கவிடுகிறது. மூக்குக்கண்ணாடி, அளவான தாடியுடன் சாந்தமான 'பிரபு'. பரட்டை தலை, க்ளின்ஷேவ் லுக்கில் அரக்கனான 'கதிர்'. இரண்டு கதாபாத்திரங்களின் குணாதிசயங்களையும் தன் நடிப்பின் மூலம் பிசிறில்லாமல் பிரித்துக் காட்டுகிறார் தனுஷ். ஏற்கெனவே 'கொடி' படத்தில் இப்படியான இரண்டு தனுஷ்களை பார்த்திருந்தாலும், அதன் சாயல் ஒட்டிக்கொள்ளாவண்ணம் மெனக்கெட்டு புதுமைக் காட்டிருக்கிறார். அதிலும் குறிப்பாக முகத்தை சாய்த்து கண்களை மேல்நோக்கி மூர்க்கத்தை வெளிப்படுத்தும் காட்சிகள் க்ளாஸ்!

ஒரு சில நிமிடமே வந்துபோனாலும் தனது மிரட்டலான தோற்றத்தால் ஈர்க்கிறார் செல்வராகவன். இந்துஜா ரவிச்சந்திரன் தேவையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். படத்துக்கான மைய உணர்வுநிலையை தனது நடிப்பால் குலையாமல் எடுத்துச் சென்றிருக்கிறார் மகளாக நடித்திருக்கும் சிறுமி ஹியா தவே. இரண்டாம் பாதியில் வரும் நடிகை எல்லி அவரம் மற்றும் தனுஷின் சிறுவயது வெர்ஷன்களாக வரும் சிறுவர்கள் மற்றும் அவரின் மகன்களாக நடித்திருக்கும் சிறுவர்களின் நடிப்பு கதையோட்டத்திற்கு பலம். தவிர, யோகிபாபு, பிரபு கதாபாத்திரங்களின் தேவை, திரையில் பெரிய அளவில் தேவைப்படவில்லை.

கிட்டத்தட்ட 11 வருடங்களுக்குப் பிறகு சாத்தியமாகியிருக்கிறது தனுஷ் - செல்வராகவன் கூட்டணி. ஆனால் இந்த முறை தனுஷின் கதையை செல்வராகவன் படமாக்கியிருக்கிறார். 'காஞ்சனா' முதல் 'கான்ஜூரிங்' வரை பார்த்து பழக்கப்பட்ட கதை என்றாலும், பல்வேறு முடிச்சுகளை தன்னுள் அடக்கிவைத்திருக்கும் திரைக்கதையால் படத்தின் முதல் பாதி சுவாரஸ்யம் நிறைந்த சஸ்பென்ஸுடன் கடக்கிறது. மாஸான காட்சிகளின்றி, கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நகரும் படம், ஒருபுறம் தந்தை - மகள் பாசத்தையும், மறுபுறம் மகளை மீட்கமுடியாமல் தவிக்கும் தந்தையின் கையறு நிலையையும், கூடவே சில அமானுஷ்ய காட்சிகளையும் பதிவு செய்வதன் மூலம் பார்வையாளர்களின் ஆவலை முதல் பாதி தூண்டுகிறது. குறிப்பாக, இடைவேளையில் வரும் திருப்பத்தைக் 'செல்வா சார் சம்பவம்' என ரசிகர்கள் ஆர்ப்பரிக்கிறார்கள்.

கதையின் மையக்கருவைச் சுற்றி எழுப்பப்படும் காரணம் பலவீனமாக எழுதப்பட்டுள்ளதுடன் செயற்கைத் தன்மையோடு இருப்பதால் அதையொட்டி நடக்கும் சம்பவங்கள் பெரிய அளவில் நம்மை திரையுடன் ஒட்டவிடுவதில்லை. நிறைய தர்க்க ரீதியான கேள்விகள் இரண்டாம் பாதியின் திரைக்கதையை சுவாரஸ்யமில்லாமல் வெறும் காட்சிகளாக கடக்க வழிவகுக்கின்றன. குறிப்பாக, எடுத்துக்கொண்டால் கதிர் கதாபாத்திரத்தின் உளவியல் ரீதியான பிரச்சினை குறித்தோ, அதன் பின்புலம் குறித்தோ தெளிவுப்படுத்தப்படுத்தாமல் வெறும் அரக்கத்தனத்தை மட்டுமே காட்சியாக்கியிருப்பது ஒரு கட்டத்திற்கு மேல் ரசிப்புக்கு வேலியிடுகிறது.

தந்தை - மகள் பாசம், யுவன் சங்கர் ராஜாவின் கூஸ்பம்ப் பின்னணி இசை, பழைய பாடல்களை காட்சிகளுக்குத் தகுந்தவாறு பொருத்தியிருக்கும் விதம், 'வீரா சூரா' பாடல் மற்றும் சில சுவாரஸ்யமான காட்சிகள் மட்டுமே படத்தை தாங்கிப்பிடிக்கின்றன. ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவில் வெண்ணிற இரவும், அடர்ந்த காடுகளும், சண்டைக் காட்சிகளும் ஈர்க்கின்றன.

மொத்தத்தில் சஸ்பென்ஸுடன் ஹாரர் - த்ரில்லர் பாணியில் முதல் பாதி சுவாரஸ்யப்படுத்தினாலும், தர்க்கப்பிழைகளுடன், பலவீனமான திரைக்கதையால் 'நானே வருவேன்' இரண்டாம் பாதி பெரிய அளவில் கைகொடுக்கவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x