

சென்னை: நடிகர் சிலம்பரசன் நடிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இந்தப் படம் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், நடிகர் கூல் சுரேஷுக்கு ஐபோன் ஒன்றை அன்புப் பரிசாக அளித்துள்ளார்.
இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் இந்தப் படம் வெளிவந்துள்ளது. எழுத்தாளர் ஜெயமோகன் கதை எழுதி உள்ளார். 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்தப் படம் உருவாக்கப்பட்டதாக தெரிகிறது. இப்போது இந்தப் படம் தரமான வசூலை ஈட்டி வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். அனைத்து பாடல்களையும் தாமரை எழுதி உள்ளார். சித்தி இத்னானி, ராதிகா, சித்திக், நீரஜ் மாதவ், ஏஞ்சலினா ஆப்ரஹம் முதலானோர் இதில் நடித்துள்ளனர்.
கேங்ஸ்ட்டர் கதைக்களத்தை கொண்டுள்ளது இந்தப் படம். முத்து என்ற கதாபாத்திரத்தில் சிலம்பரசன் நடித்துள்ளார். இருந்தாலும் படத்தில் நடித்தவர்களை காட்டிலும் நடிகர் கூல் சுரேஷ் இந்தப் படத்திற்கு செல்லும் இடமெல்லாம் புரொமோஷன் செய்து வந்தார். “வெந்து தணிந்தது காடு... எஸ்டிஆருக்கு வணக்கத்த போடு” என தொடங்கி அதை வெவ்வேறு விதமாக சொல்லி வந்தார்.
படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நடிகர் சிலம்பரசனுக்கு காரும், இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனுக்கு புல்லட் பைக் ஒன்றும் பரிசாக வழங்கி இருந்தார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ். இந்நிலையில், கூல் சுரேஷுக்கு ஐபோன் ஒன்றை அவர் பரிசளித்துள்ளார். அதனை கூல் சுரேஷ் உறுதி செய்துள்ளார்.