‘பொன்னியின் செல்வன் படத்தில் நடித்ததே பெருமை’ - சரத்குமார் நேர்காணல்

‘பொன்னியின் செல்வன் படத்தில் நடித்ததே பெருமை’ - சரத்குமார் நேர்காணல்
Updated on
2 min read

‘பொன்னியின் செல்வன்’ ஃபீவர் ஆரம்பித்து விட்டது. பரபரப்பாகத் தொடங்கி இருக்கிறது, முன்பதிவுகள். படத்தை இயக்கி இருக்கும் மணிரத்னம், நடித்துள்ள விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்டோர் புரமோஷனில் பிசியாக இருக்கிறார்கள். கேரளாவில் படப்பிடிப்பு ஒன்றில் இருக்கும் ‘பெரிய பழுவேட்டரையர்’ சரத்குமாரிடம் பேசினோம்.

‘பொன்னியின் செல்வன்’ கதைக்குள்ள நீங்க எப்படி வந்தீங்க?

மணிரத்னத்தோட மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிச்ச ‘வானம் கொட்டட்டும்’ படத்துல நடிச்சிட்டிருந்தேன். மணிரத்னம் அப்பப்ப வந்து பார்த்திட்டிருந்தார். ஒரு நாள் திடீர்னு கூப்பிட்டார். ‘பொன்னியின் செல்வன்ல பெரிய பழுவேட்டரையர் கேரக்டர் பண்றீங்களா?’ன்னு கேட்டார். அந்த நாவலை நானும் படிச்சிருக்கேன் அப்படிங்கறதால, உடனே சம்மதம் சொல்லிட்டேன். அந்த கேரக்டருக்கு உடலமைப்பு முக்கியம். நான் பொருத்தமா இருந்ததாலதான் கூப்பிட்டிருக்கார்னு பிறகு புரிஞ்சுகிட்டேன். இந்தப் படத்துல இருக்கிறதே பெரிய மகிழ்ச்சி. அவர் இயக்கத்துல நடிச்சது இன்னும் சிறப்பா இருந்தது.

பெரிய பழுவேட்டரையர், கதையில முக்கியமான கேரக்டராச்சே...

இந்தப் படத்தைப் பொறுத்தவரை எல்லா கேரக்டருமே முக்கியமானதுதான். ஒவ்வொருத்தருக்கும் வலுவானப் பின்னணி சொல்லப்பட்டிருக்கு. அப்படித்தான் பெரிய பழுவேட்டரையர் கேரக்டரும். மையமான கேரக்டர் இது. 64 விழுப்புண் பெற்ற மாவீரன் அவர். பழுவூரை ஆண்ட சிற்றரசர். சுந்தர சோழனுக்கு வலதுகரம். அவர் காதல் வயப்பட்டு நந்தினியை திருமணம் பண்றார். அப்புறம் என்ன நடக்கு அப்படிங்கறதுதான் கதையே.

கொஞ்சம் நெகட்டிவ் கேரக்டர் மாதிரி தெரியுமே?

இல்ல... பார்க்கும்போது ஏதோ சதித்திட்டம் தீட்டுற மாதிரி தெரியும். பிறகு நாட்டுக்காக நல்லது செய்றவர்ங்கற உண்மை தெரிய வரும்.

ஐஸ்வர்யா ராய் உங்களுக்கு ஜோடியா நடிச்சிருக்காங்க...

நந்தினியா நடிச்சிருக்காங்க. உலக அழகி. சிறந்த நடிகை. அந்த கேரக்டருக்கு பொருத்தமான நடிகை அவங்கதான். ‘அவர் அழகில் மயங்காதவங்களே இல்லை’ அப்படிங்கறதுதானே அவங்க பாத்திரம். இந்தப் படத்துக்காக நிறைய மெனக்கெட்டு, அதிகமான உழைப்பை கொடுத்திருக்காங்க.

பொதுவா சில பாடல் காட்சிகள்ல அரசர் கால கெட்டப்ல வந்திருப்பீங்க. முதல் முறையா ஒரு வரலாற்றுப் புனைவுல நடிச்சது எப்படியிருந்தது?

மகிழ்ச்சியா இருந்தது. நாம படிச்சு ரசிச்ச, ஒரு நாவலின் கேரக்டர்ல நடிச்சது புது அனுபவமா இருந்தது. நடிப்பு அப்படிங்கறதைத் தாண்டி ஆத்ம திருப்தி கிடைச்சது. டைரக்டர் என்ன சொன்னாரோ அதைத்தான் பண்ணியிருக்கோம். அதனால அவருக்கும் மகிழ்ச்சி.

படத்துல நிறைய நடிகர்கள். இவ்வளவு பெரிய ‘ஸ்டார் காஸ்ட்’டோட நடிச்சஅனுபவம்?

நினைத்தாலே இனிக்கிற மாதிரியான அனுபவம்தான் அது. இதுல ஒவ்வொருத்தருமே ஹீரோதான். எல்லாரையும் ஒரே இடத்துல சந்திச்சு அவங்களோட நடிச்சது கண்டிப்பா புதுமையா இருந்தது. ஷூட்டிங் ஸ்பாட்டும் ஜாலியா இருக்கும். ‘ஸ்கிரிப்ட் ரீடிங்’ பண்ணும்போதே எல்லோரும் எப்படி நடிக்கணும்னு உணர்ந்து பண்ணியிருக்காங்க. நடிச்ச ஒவ்வொருத்தருக்கும் இந்தப்படம் முக்கியம் அப்படிங்கறதால ரொம்ப ஃபீல் பண்ணி நடிச்சிருக்கோம்.

சின்ன பழுவேட்டரையருக்கும் உங்களுக்குமான காட்சிகள் எப்படியிருக்கும்?

பார்த்திபன் அந்த கேரக்டர்ல சிறப்பா நடிச்சிருக்கார். என் மேலயும் நாட்டின் மேலயும் ரொம்ப அக்கறையில பேசற கேரக்டர் அவருடையது. நந்தினியை நம்ப வேண்டாம்னு சொல்றவர். அவருக்கும் எனக்கும் சின்ன சின்ன மோதல்கள் வரும். அது சுவாரஸ்யமா இருக்கும்.

நாம படிச்சு ரசிச்ச, ஒரு நாவலின் கேரக்டர்ல நடிச்சது புது அனுபவமா இருந்தது. நடிப்பு அப்படிங்கறதைத் தாண்டி ஆத்ம திருப்தி கிடைச்சது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in