“ஓடிடியாக இருந்தாலும் திரையரங்காக இருந்தாலும் பார்முலா தேவை” - இயக்குநர் சிம்புதேவன்

இயக்குநர் சிம்புதேவன்
இயக்குநர் சிம்புதேவன்
Updated on
1 min read

“ஓடிடியாக இருந்தாலும், திரையரங்காக இருந்தாலும் பார்வையாளர்களை உட்கார வைப்பதற்கான பார்முலா தான் தேவை” என்று இயக்குநர் சிம்புதேவன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் குறும்பட போட்டிகளுக்கான விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் நடுவர்களாக இயக்குநர் வஸந்த், இயக்குநர் சிம்புதேவன் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு கலந்துகொண்டு போட்டியாளர்களை தேர்ந்தெடுத்து விருதுகளை வழங்கினார்கள். இதில் கலந்துகொண்ட இயக்குநர் சிம்புதேவன் பேசும்போது, ‘‘என்னைப் பொருத்தவரை இயக்குநர்களுக்கு என்று ஒரு பார்மெட் கிடையாது. அது ஓடிடியாக இருந்தாலும், திரையரங்காக இருந்தாலும் பார்வையாளர்களை உட்கார வைப்பதற்கான பார்முலா தான் தேவை. ‘கசடதபற’ வெளியாகி நல்ல வரவேற்பு கிடைத்தது. திரையரங்கில் என்ன ரெஸ்பான்ஸ் கிடைக்குமோ அது இப்படத்திற்கும் கிடைத்தது. சினிமாவில் பயணிக்கும்போது அடிப்படையான விஷயங்கள் என்னென்ன என்று அனுபவத்தில் தான் தெரியும். ‘சாணி காகிதம்’, ‘டாணாக்காரன்’, ஆங்கிலத்தில் ரெட் நோட்டீஸ். ‘சாணி காகிதம்’ இயக்குநரை பிடித்திருக்கிறது. ‘மாநாடு’ படத்தில் சிம்புவின் நடிப்பு பிடித்திருந்தது. ‘ராக்கெட்ரி’ படத்தில் மாதவன் நடிப்பும், ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் நித்யா மேனனின் நடிப்பும் பிடித்திருந்தது” என்றார்.

தொடர்ந்து பேசிய இயக்குநர் வஸந்த், “ஒரு திரைப்படத்தை ஓடிடியில் பார்ப்பதற்கும் திரையரங்கில் பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. திரையரங்கில் பலதரப்பட்ட பார்வையாளர்களுடன் பார்க்கும் அனுபவம் ஓடிடியில் இருக்காது.

சினிமாவை பொருத்தவரை நம்பிக்கையை எப்போதும் விடக்கூடாது. ’பேசுகிறேன் பேசகிறேன்’ பாடலில் கூட நம்பிக்கை தரும் விதமான வரிகளை அமைத்திருப்பேன், விழுந்தால் எழுந்துகொண்டே இருங்கள். எங்கள் காலத்தில் இருந்ததைவிட இப்போது தொழில்நுட்பம் மிகவும் வளர்ச்சியடைந்துவிட்டது. சினிமா இப்போது பொற்காலத்தில் இருக்கிறது. அதைப் பயன்படுத்தி எல்லோரும் வெற்றியடைய வேண்டும். நிச்சயம் வெற்றி பெறுவீர்கள் என்று வாழ்த்துகிறேன். சிம்புதேவன் கூறியதுபோல ஓடிடி பார்வையாளர்கள் மற்றும் திரையரங்க பார்வையாளர்களை புரிந்துகொண்டு அவர்களுக்கேற்றவாறு மாற்றியமைத்தால் எந்த மாதிரியான படங்களும் ஓடும். திரையரங்கமும், ஓடிடியும் அண்ணன் தம்பி மாதிரி தான்.

சமீபத்தில் வெளியான ‘ராக்கெட்ரி’ படத்தை இயக்கிய மாதவனை இயக்குநராக பிடித்திருக்கிறது. ‘மாமனிதன்’ படத்தில் விஜய் சேதுபதி நடிப்பு மிகவும் பிடித்திருக்கிறது. அதேபோல் அப்படத்தின் இயக்குநர் சீனுராமசாமியின் இயக்கமும் பிடித்திருக்கிறது. சமீபத்தில் வெளியான ‘நட்சத்திரம் நகர்கிறது’ படமும் எனக்குப் பிடித்த படம். ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் நித்யா மேனன் நடிப்பும், ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தில் துஷாராவின் நடிப்பையும் பிடித்திருக்கிறது என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in