பொதுக்குழு கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு: நடிகர் சங்கத்துக்கு பின்னடைவு

பொதுக்குழு கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு: நடிகர் சங்கத்துக்கு பின்னடைவு
Updated on
1 min read

நடிகர் சங்கப் பொதுக்குழு கூட்டத்துக்கு காவல் துறை அனுமதி மறுக்கப்பட்டது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 63-வது பொதுக்குழு நவம்பர் 27-ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு சென்னை லயோலா கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை நடிகர் சங்கம் பல வாரங்களாக நடத்தி வந்தது.

இப்பொதுக்குழுவில் தமிழ் சினிமாவின் நூற்றாண்டு நிறைவின் தொடக்க விழா, எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா என இரண்டையும் சேர்த்து நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் மூத்த கலைஞர்கள் அனைவரும் கவுரவிக்கப்பட்டு, 100 ஆண்டுகள் கடந்த மூத்த கலைஞர்களின் நினைவாக பல விருதுகளும் அளிக்க திட்டமிட்டது நடிகர் சங்க நிர்வாகம்.

இப்பொதுக்குழுவில் கலந்து கொள்ள அனைத்து முன்னணி நடிகர், நடிகைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. மேலும், கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், தொடர் மிரட்டல் எதிரொலியால் அளித்த அனுமதியை ரத்து செய்தது லயோலா கல்லூரி நிர்வாகம். அதற்கான கடிதத்தை நடிகர் சங்கத்துக்கும், காவல் துறைக்கும் அனுப்பியது. இக்கடிதத்தை வைத்து நடிகர் சங்கப் பொதுக்குழுவுக்கு அனுமதி மறுத்தது தமிழக காவல் துறை.

தமிழக அரசின் காவல் துறையின் அனுமதி மறுப்பு, தென்னிந்திய நடிகர் சங்கத்துக்குப் பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இந்த திடீர் அனுமதி மறுப்பால் நிர்வாகிகள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.

அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து, தற்போது தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் கலந்து ஆலோசித்து வருகிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in