

அஜித்தின் 'துணிவு' திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என நடிகர் ஆர்.கே.சுரேஷ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதையடுத்து நெடிசன்களிடையே சலசலப்பு நிழவி வருகிறது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் திரைப்படம் 'துணிவு'. மஞ்சுவாரியர் நாயகியாக நடிக்கும் படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். அண்மையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. போனிகபூர் தயாரிக்கும் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக நடிகர் அஜித் பேங்காங்க் பறந்துள்ளார். முன்னதாக 'துணிவு' தீபாவளிக்கு வெளியாகும் எனக் கூறப்பட்ட நிலையில், இன்னும் படப்பிடிப்பு முடியாத காரணத்தால் படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், 'துணிவு திரைப்படம் 2023-ம் ஆண்டு பொங்கல் அன்று பிரம்மாண்டமாக உலகம் முழுவதும் வெளியாகிறது' எனத் தெரிவித்துள்ளார். இதனிடையே விஜய் நடிக்கும் 'வாரிசு' திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இன்று நடக்கிறது. படம் பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு முன்பே உறுதி செய்துள்ளது.
அஜித்தின் 'துணிவு' திரைப்படமும், விஜய்யின் 'வாரிசு' படமும் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகலாம் எனப் பேசப்பட்டு வந்த நிலையில், திரைத்துறையைச் சேர்ந்த ஆர்.கே.சுரேஷின் பதிவு அஜித் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. இதனால், ட்விட்டரில் அஜித், விஜய் ரசிகர்களிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு பொங்கல் திருவிழா அன்று அஜித்தின் 'வீரம்' மற்றும் விஜயின் 'ஜில்லா' படங்கள் மோதின. 8 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் இருபெரும் நடிகர்களின் படங்கள் வெளியாகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.