Published : 25 Sep 2022 01:36 PM
Last Updated : 25 Sep 2022 01:36 PM

பொன்னியின் செல்வன் பாடல் அனுபவம் 6 | தேவராளன் ஆட்டம் - அரச குடும்பத்தில் பலி கேட்கும் ஆட்டம்

'பொன்னியின் செல்வம் பாகம்-1' படத்தின் 6-வது பாடலாக வெளிவந்துள்ளது இந்த 'தேவராளன் ஆட்டம்' பாடல். பாடலின் வரிகளும், இசையமைத்துள்ள விதமும் இளைய தமிழ்ச் சமூகத்தினரிடம் பெரும் வரவேற்பை பெற்று பலரது ரிப்பீட் மோடு பாடலாக மாறியிருக்கிறது. இந்தப் படத்தில் உள்ள மற்ற பாடல்களைப் போல எளிதாக கடந்து போகும் பாடலாக இல்லாமல் இருப்பதே இப்பாடலின் தனிச்சிறப்பு.

இந்த ஆல்பத்தின் "தேவராளன் ஆட்டம்" பாடல் நிச்சயம் கிளைமாக்ஸ் காட்சிக்கு முன்பு வரக்கூடிய ஒரு பாடலாகத்தான் இருக்கும். தெய்வீக சக்திகளைக் கொண்டவன் ஆடும் ஆட்டம் என்பதே தேவராளன் ஆட்டம். இந்தப் பாடல் வெளியான நாள் முதலே பாடலைக்கேட்ட பலரும் இதனை பொன்னியின் செல்வன் நாவலில் வரும் குரவைக்கூத்து அத்தியாயத்துடன் ஒப்பிட்டு டிகோடிங் செய்து வருகின்றனர். இதன்மூலம் முதல் பாகத்தின் இறுதிக்காட்சிக்கு ரசிகர்கள் தயாராகிவிட்டதை அறிய முடிகிறது. கிட்டத்தட்ட 4.39 நிமிடம் வரும் இந்தப் பாடல்தான் திரையரங்கிற்கு வரும் ரசிகர்களை அதிரவைத்து அமைதியாக்கி கனத்த மவுனத்துடன் சிலிர்ப்புடன் (Goosebumps) வெளியேறச் செய்யப்போகும் பாடல் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

பொன்னியின் செல்வன் நாவலில் கடம்பூர் மாளிகையில், தனது நண்பன் கந்தமாறனை சந்திக்கிறான் வந்தியத்தேவன். அந்த இடத்தில் அத்தியாயம் 5-ல் இந்த குரவைக்கூத்து குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

"முக்கிய விருந்தாளிகள் அனைவரும் வந்து சேர்ந்ததும், குரவைக் கூத்து ஆடும் பெண்கள் ஒன்பது பேர் மேடைக்கு வந்தார்கள். ஆட்டத்திற்குத் தகுந்தவாறு உடம்பை இறுக்கி ஆடை அணிந்து, உடம்போடு ஒட்டிய ஆபரணங்களைப் பூண்டு, கால்களில் சிலம்பு அணிந்து, கண்ணி, கடம்பம், காந்தள், குறிஞ்சி, செவ்வலரி ஆகிய முருகனுக்கு உகந்த மலர்களை அவர்கள் சூடியிருந்தார்கள். மேற்கூறிய மலர்களினால் கதம்பமாகத் தொடுத்த ஒரு நீண்ட மலர் மாலையினால் ஒருவரையொருவர் பிணைத்துக் கொண்டவாறு, அவர்கள் மேடையில் வந்து நின்றார்கள். சிலர் கைகளில் சந்தன மரத்தினால் செய்து வர்ணம் கொடுத்த அழகிய பச்சைக் கிளிகளை லாவகமாக ஏந்திக் கொண்டிருந்தார்கள்.

சபையோருக்கு வணக்கம் செய்துவிட்டுப் பாடவும் ஆடவும் தொடங்கினார்கள். முருகனுடைய புகழைக் கூறும் பாடல்களைப் பாடினார்கள். முருகனுடைய வீரச் செயல்களைப் பாடினார்கள். சூரபத்மன், கஜமுகன் முதலிய அசுர கணங்களைக்கொன்று, கடல் நீரை வற்றச் செய்த வெற்றிவேலின் திறத்தைப் பாடினார்கள். இத்தகைய பாடலும் ஆடலும் பறை ஒலியும் குழல் ஒலியுமாகச் சேர்ந்து பார்த்திருந்தவர்களையெல்லாம் வெறிகொள்ளச் செய்தன" என்று அந்த காட்சியை விவரித்திருப்பார் அமரர் கல்கி.

அதேநேரம் இந்த ஆட்டம் முடிந்த பின்னர், தேவராளன் ஆட்டம் ஆட ஆணும் பெண்ணும் மேடையேறியதையும், ஆண் அரச குடும்பத்தில் பலி கேட்டதையும் நாவலின் மூலம் நாம் அறிய முடியும்.

பண்டைய காலங்களில், பொழுதுபோக்காக ஆடப்பட்ட இந்த குரவைக்கூத்து, போர்க்காலங்களிலும், மக்களை பேராபத்து சூழும் காலத்திலும் ஆடப்பட்டுள்ளது. தண்குரவை என்பது எந்த ஆபத்தும் இல்லாத நேரங்களில் ஆடப்பட்டுள்ளது.

தமிழ் இலக்கியத்தில் குரவைக்கூத்து, தொற்றியாடல், தண்குரவை, அபிதான சிந்தாமணி என்ற பெயர்களிலும் விளிக்கப்பட்டுள்ளது. 'தழூஉ' என்ற பெயரிலும் அழைக்கப்பட்டிருக்கிறது. 'தழூஉ' என்பதற்கு தழுவிக் கொண்டு ஆடுதல், ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் தழுவிக் கொண்டு ஆடுதல் என்பது பொருள். இந்த ஆட்டம் வேறு வேறு இணைகளுடன் சேர்ந்து ஆடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இத்தகைய சங்க இலக்கியப் பெருமை கொண்ட ஒரு ஆட்டத்துக்கான பாடல் வரிகளை சற்றும் தொய்வின்றி எழுதியிருக்கிறார் படத்தின் பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன். பாடலை பின்னணி பாடகர் குழுவினருடன் இணைந்து யோகி சேகர் பாடியிருக்கிறார்.

"டம் டம் டம் டம் டம் டமரேடம் டம் டம் டம் டம் டமரேடம் டமடம் டம் டமரே" என்று ரொம்ப சாதரணமாக இந்தப் பாடலை தொடங்கியிருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான், மெது மெதுவாக பாடல் கேட்பவர்களுக்கு சோழ தேசத்துக்கு நிகழப்போகும் பேராபத்தின் இழப்பை உணர்த்தும் வகையில் சூழ்ச்சி, தந்திரம், காழ்ப்புணர்ச்சி, விரோதம், பகைமை, அருள்வாக்கு, பலிகேட்டலின் உக்கிரம் என அனைத்து விதமான உணர்வுகளையும் இந்த ஓரே பாடலில் அனுபவிக்க வைத்திருக்கிறார்.

"செக் செக் செக் செக் செக்செக் செக் செக் செக் செக்செக் செக் செக செகபணசெக் செக் செக செகபணசெக் செக் செக் செக் செக்செக் செக் செக செகபணபொட் பொட் பொட் பொட்பொட் பொட் பொட் பொட்பொட் பொட் பொட் பொட்பட் பட் பட் பட் பட் பட்பட் பட் பட் பட் பட் பட்பட் பட் பட் படவெனபட் பட் பட் படவெனபட் பட் பட் படவெனபட் பட் பட் படவென" - இதைக் கேட்ட மாத்திரத்தில் சிரிக்க தோன்றினாலும், திரும்ப திரும்ப கேட்கும்போது உண்மையில் ஓர் அச்ச உணர்வு வரும். பின்னால் நடக்கப்போகும் ஆபத்தை அறிவிக்க இசைக் கருவிகளைத் தவிர்த்து, இந்தோனேசியாவின் வழிபாட்டு வகை பாடல் முறையான இந்த "Monkey Chant" எனப்படும் பின்னணி பாடகர்களின் குரல்களை மட்டும் பபயன்படுத்தி பாடும் முறையை கையாண்டு நம் மனங்களை ஆதிக்கம் செய்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.

இந்தப் பாடல் உணர்வுபூர்வமாக இருக்க வேண்டும் என்ற ஒற்றை உணர்வால், இசைக் கருவிகளைத் தவிர்த்து பின்னணி பாடுபவர்களின் குரல்களை மட்டும் கொண்டு, இந்த பாடல் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தமிழ் மொழிக்கு இயல்பாகவே அந்த ஆற்றல் உண்டு. பட்டும்படாமல் உச்சரிக்கும்போது மிருதுவாகவும்,சரியான அளவில் முறையான ஒலியுடன் உச்சரிக்கும்போது வெட்டிப் பிளப்பது போலவும் இருக்கும் வல்லமை தமிழுக்கு உண்டு. அந்த லயத்தை லாவகமாகப் பயன்படுத்தி, சொற்பமான இசைக்கருவிகளைக் கொண்டு, தமிழர் வரலாற்றுக்கு பெருமை சேர்த்துள்ளது இந்தப்பாடல். அதற்கேற்ற சரியான வரிகளை தனக்கே உரிய பாணியில் எழுதியிருக்கிறார் இளங்கோ கிருஷ்ணன்.

"ஊன் பற்ற கேட்ட உடலை வாள் பெற்று கெட்டழிக்கவே"

"சூடானது சூடானது சூடானது யுத்தம்
சூடானது சூடானது சூடானது ரத்தம் போராடுது போராடுது போராடுது சித்தம்
தீராதது தீராதது தீராதது வெறிச்சத்தம்"

கொத்துப்பறை கொத்துப்பறை
கொத்துப்பறை கொட்டு
ரத்தசெறு ரத்தசெறு
ரத்தசெறு வெட்டு

கொட்ட பகை கொட்ட பகை
கொட்ட பகை வெட்டு
துட்டச்செயல் துட்டச்செயல்
துட்டச்செயல் கட்டு

செறுவேட்டலை பேசிடுதே
மனுக்கேட்டுனை ஓதிடுதே
ஒரு தாட்சிணி தீயுடனே
அதை ஆற்றிடவா பேயனே" என்று எதுகை மோனையில் ஜாலம் காட்டும் பாடலாசிரியர், முப்பாட்டன் முருகனை,

"செங்குருதி சேயோனே
வங்கொடிய வேலோனே
செவ்வலறி தோளோனே
என் குடிய காப்போனே" என போற்றிவிட்டு,

"மாமழை பெய்திடுமா
மாநிலம் ஓங்கிடுமா
ஒப்புகழி தாங்கிடுமா
கைகளும் ஓங்கிடுமா" அருள்வாக்கு கேட்பது போல் எழுதியிருப்பது அற்புதம். பின்னர்வரும் வரிகளில், "முக்தை தரும் பக்தி திருநகை" என்ற பாடலைப் போன்று,

"கொட்டுப்பறை கொட்டெழுந்திட
சுட்டுப்பகை கெட்டழிந்திட
கொச்சக்குடி பட்டதொருவனின்
ரத்தத்தினை கொட்டி பலியிடு
சுட்ட பலி கேட்டாள் சங்கரி
ரத்தத்தினை கொட்டி பலியிடு

வேந்தன் குடி கேட்டாள் பூதவி
ரத்தத்தினை கொட்டி பலியிடு
இளையோன் தலை கேட்டாள் பைரவி
ரத்தத்தினை கொட்டி பலியிடு" என பலி கேட்கும் இடங்களில் அபாரமாக ஸ்கோர் செய்கிறார் இளங்கோ கிருஷ்ணன். இந்தப் பாடல் வேகமாக பாடுவதால், நீங்களும் வேகமாக கடந்து செல்லாமல், வரிகளை நிறுத்தி நிதானமாக கேட்டுப்பாருங்கள் தமிழ் உங்களை அப்படி மயக்கும்.

ஆதித்த கரிகாலன் மரணம் குறித்து எழுதும் கல்கி, ஆதித்த கரிகாலனின் மரணத்திற்கு காரணமாக இருந்த உத்தமசோழனை இரக்கத்தின் காரணமாக மன்னித்துவிட்டு, ஆதித்த கரிகாலன் மர்மமான முறையில் சதியால் கொல்லப்பட்டதாகவே நாவலில் கூறுகிறார். ஒரு சோழ மன்னன் மீது கொலைப்பழி சுமத்த விரும்பாத கல்கி, இவ்வாறு எழுதியிருக்கிறார்.

ஆதித்த கரிகாலனை கொலை செய்த துரோகிகளான ரவி தாஸன், சோமன் சாம்பவன் மற்றும் கொலையுடன் தொடர்புடையவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. காட்டுமன்னார்கோயில் என இன்று அழைக்கப்படும் உடையார்குடி என்ற இடத்திலுள்ள கோயிலின் பின்சுவரில் உள்ள கல்வெட்டில் இந்த செய்தி பொறிக்கப்பட்டிருக்கிறது. இந்த கொலையில் உத்தம சோழனுக்கு பங்கிருப்பதை இக்கல்வெட்டு சூசகமாக அறிவிக்கிறது. கல்வெட்டில் துரோகிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதித்த கரிகாலனை கொன்றவர்கள் பாண்டியர்களோ, சேரர்களாகவோ இருந்திருந்தால், எதிரிகள் என்று குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால், கொலை செய்தவர்கள் கூடவே இருந்து குழி பறித்தவர்கள் என்பதால் துரோகிகள் என குறிப்பிடப்பட்டுள்ளதாக வரலாற்றுச் சான்றுகள் விவரிக்கின்றன.

இந்தியாவின் தலைசிறந்த படைப்பாளிகளில் தனக்கு தனி இடம் உண்டு என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் மணிரத்னம். ஒரு வரலாற்றுப் புனைவு, முதல் பாகத்தின் 6 பாடல்களை வெளியிட்ட முறையே அதற்கு சான்று. வந்தியத் தேவன் அறிமுகம், ஆதித்த கரிகாலன் அறிமுகம், வானதி குந்தவை நட்பு, குந்தவை வந்தியத்தேவன் சந்திப்புக்கான களம், பூங்குழலி அறிமுகம், அரச குடும்ப பலி என்று 6 பாடல்களுக்கான சூழல்களை இந்த வரிசையில் அடுக்கி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் கூட்டியிருக்கிறார். துரோகம், குரோதம், வஞ்சனை, காழ்ப்புணர்ச்சி, சூழ்ச்சி, பழிவாங்கும் எண்ணம் கொண்ட மனிதர்கள் சோழ பேரரசுக்கு இழைத்த அந்த தீரா துயரத்தை வெள்ளித்திரையில் காண இன்னும் 5 நாட்கள் காத்திருக்க வேண்டும்.

இணைப்பு : Devaralan Attam - Lyric Video

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x