

தியாகராஜன் குமாரராஜா படத்தில் விஜய் சேதுபதி பெண் வேடமிட்டு நடிப்பது போன்ற புகைப்படம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
'ஆரண்ய காண்டம்' படத்தைத் தொடர்ந்து, நீண்ட நாட்கள் கழித்து தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பை இன்று தொடங்கியிருக்கிறார் தியாகராஜன் குமாரராஜா. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்திருக்கிறார் இப்படத்தின் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம்.
இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் நாயகர்களாக விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் பாசில் ஆகியோர் நடிக்கவிருக்கிறார்கள். இப்படத்தின் நாயகியாக சமந்தா ஒப்பந்தமாகி இருக்கிறார்.
'ஆரண்ய காண்டம்' படத்தின் பின்னணி இசை பெரியளவில் பேசப்பட்டது. அப்படத்தின் இசையமைப்பாளரான யுவன் இப்படத்துக்கு இசையமைப்பாளராக ஒப்பந்தமாகி உள்ளார்.
சென்னையில் தொடங்கப்பட்டு இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தின் புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. இதில் விஜய் சேதுபதி பெண் வேடமிட்டு இருப்பது போலவும், அவருக்கு தியாகராஜன் குமாரராஜா காட்சியை விளக்குவது போலவும் அப்புகைப்படம் அமைந்திருக்கிறது.
ஒரு காட்சிக்கு மட்டுமே அல்லது படம் முழுவதுமாக பெண் வேடமிட்டு வருகிறாரா என்பது விரைவில் தெரியவரும். நீண்ட நாட்கள் கழித்து தியாகராஜன் குமாரராஜா இயக்கவிருக்கும் இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.