சத்ரியன் புகழ் இயக்குநர் கே.சுபாஷ் காலமானார்

சத்ரியன் புகழ் இயக்குநர் கே.சுபாஷ் காலமானார்
Updated on
1 min read

'சத்ரியன்', 'அபிமன்யு' உள்ளிட்ட படங்களின் இயக்குநரும், கதாசிரியருமான கே.சுபாஷ் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 57.

மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்த 'நாயகன்' படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் கே.சுபாஷ். அதனைத் தொடர்ந்து 'கலியுகம்' என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

'சத்ரியன்', 'அபிமன்யு', 'நினைவிருக்கும் வரை', 'ஏழையின் சிரிப்பில்', 'சபாஷ்' உள்ளிட்ட பல்வேறு வரவேற்பு பெற்ற படங்களை இயக்கியுள்ளார்.

இந்தியில் ஷாருக்கான் நடிப்பில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'சென்னை எக்ஸ்பிரஸ்' படத்தின் கதாசிரியர் இவர் தான். மேலும் இந்தியில் 'தில்வாலே' மற்றும் 'ஹவுஸ்ஃபுல் 3' உள்ளிட்ட படங்களுக்கும் கதை எழுதியிருக்கிறார்.

நீண்ட காலமாக சிறுநீரக கோளாறு காரணமாக அவதியுற்று வந்தார். மிகுந்த உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சென்னையில் இன்று (புதன்கிழமை) காலை அவரது உயிர் பிரிந்தது.

அவரது உடலுக்கு திரையுலகினர் பலரும் நேரிலும், சமூக வலைத்தளத்திலும் தங்களுடைய அஞ்சலியைத் செலுத்தி வருகிறார்கள்.

கே.சுபாஷ் மறைவுக் குறித்து கதாசிரியர் ஸ்ரீதர் ராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில், "கதாசிரியர் மற்றும் இயக்குநர் கே.சுபாஷ் சென்னையில் இன்று காலமாகிவிட்டார். 'சென்னை எக்ஸ்பிரஸ்' படத்துக்கு கதை எழுதியிருக்கிறார். மேலும் 'சத்ரியன்' உள்ளிட்ட 20 தமிழ் படங்களை இயக்கியிருக்கிறார். 'அக்னி நட்சத்திரம்' மற்றும் 'நாயகன்' படங்களுக்கு மணிரத்னத்திடம் பணியாற்றினார். அதற்குப் பிறகு ராஜ் சந்தோஷிடம் பணிபுரிந்தார்.

நான் சந்தித்த கதாசிரியர்களில் சிறப்பானவர். அதுமட்டுமன்றி பணிவான, நேர்மையான, வேடிக்கையானவரும் கூட. பலரும் அவருடைய கதைகள் மற்றும் கதை கருத்துக்களை எடுத்துக்கொண்டு அவருக்கு பணம் தராமலும் அல்லது பெயரைக் குறிப்பிடாமலும் விட்டுவிட்டார்கள். அதைப் பற்றி அவரிடம் சொன்னால் "நாம் எல்லாம் ஆறு மாதிரி சார்.. தேவைப்பட்டால் வந்து தண்ணீரை எடுத்துக் கொள்வார்கள்" என்று சிரிப்பார்" என்று குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in