Published : 22 Sep 2022 03:31 PM
Last Updated : 22 Sep 2022 03:31 PM

நடிகர் போண்டாமணியை நேரில் சந்தித்து நலம் விசாரித்த அமைச்சர் மா.சுப்ரமணியன்

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நடிகர் போண்டாமணியை அமைச்சர் மா.சுப்ரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மருத்துவ செலவுகள் ஏற்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

இலங்கையை பூர்விகமாகக் கொண்ட போண்டா மணி 1991-ம் ஆண்டு வெளியான 'பவுனு பவுனுதான்' என்ற பாக்யராஜ் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். அதைத்தொடர்ந்து சிறிய கதாபாத்திரம் தொடங்கி காமெடி நடிகராக பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றார். குறிப்பாக 'சுந்தரா டிராவல்ஸ்', 'மருதமலை', 'வின்னர்', 'வேலாயுதம்', 'ஜில்லா' உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் பெற்றார். 2019-ம் ஆண்டு வெளியான 'தனிமை' படத்தில் நடித்திருந்தார்.

கடந்த சில நாட்களாக உடல்நல பாதிப்பால் அவதிப்பட்டு வந்தவர், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் மருத்துவச் செலவுகளுக்கு உதவ கோரி நடிகர் பெஞ்சமின் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், ''அன்பு அண்ணன், நகைச்சுவை நடிகர் போண்டாமணிக்கு இரண்டு கிட்னிகளும் செயலிழந்து விட்டது. அவர் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த காணொலியைப் பார்க்கும் நண்பர்கள் மேல் சிகிச்சைக்கு உதவும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்'' என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் இன்று சிகிச்சையில் உள்ள நடிகர் போண்டாமணியே நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தவர், அதற்கான முழு செலவையும் முதல்வர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் ஏற்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x