போண்டாமணிக்கு உதவி பண்ணுங்க - நடிகர் பெஞ்சமின் வேண்டுகோள்

போண்டாமணி
போண்டாமணி
Updated on
1 min read

நகைச்சுவை நடிகர் போண்டாமணி அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது மேல் சிகிச்சைக்கு உதவும்படி நடிகர் பெஞ்சமின் காணொலி மூலமாக உதவி கோரியுள்ளார்.

இலங்கையை பூர்விகமாகக் கொண்ட போண்டா மணி 1991-ம் ஆண்டு வெளியான 'பவுனு பவுனுதான்' என்ற பாக்யராஜ் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். அதைத்தொடர்ந்து சிறிய கதாபாத்திரம் தொடங்கி காமெடி நடிகராக பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றார். குறிப்பாக 'சுந்தரா டிராவல்ஸ்', 'மருதமலை', 'வின்னர்', 'வேலாயுதம்', 'ஜில்லா' உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் பெற்றார். 2019-ம் ஆண்டு வெளியான 'தனிமை' படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரின் மேல் சிகிச்சைக்கு உதவி கோரி நடிகர் பெஞ்சமின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ''அன்பு அண்ணன், நகைச்சுவை நடிகர் போண்டாமணிக்கு இரண்டு கிட்னிகளும் செயலிழந்து விட்டது.

அவர் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த காணொலியைப் பார்க்கும் நண்பர்கள் மேல் சிகிச்சைக்கு உதவும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். இலங்கையிலிருந்து வந்து தமிழகத்தில் தஞ்சம் புகுந்து பல்வேறு தடைகளைத் தாண்டி சினிமாவில் நுழைந்தவர். தனியாகவே இந்தியாவுக்கு வந்தார், அவர் தனியாக குழந்தைகளை விட்டுவிட்டு போய்விடக்கூடாது. நம்மால் முடிந்தவரை அவருக்கு உதவ வேண்டும்'' என்று கண்ணீர்மல்க பேசி காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in