

கடந்த ஆகஸ்ட் 19-ம் தேதியன்று 'பொன்னியின் செல்வன் - பாகம் 1' படத்தின் 2-வது பாடலாக "சோழா சோழா" பாடல் வெளியானது. சோழ நாட்டின் பட்டத்து இளவரசரான ஆதித்த கரிகாலன், ராஷ்டிரகூடர்கள் உடனான போரில் கண்ட வெற்றியைக் கொண்டாடி மகிழும் வகையில் இந்தப் பாடலின் லிரிக்கல் வீடியோ அமைந்திருந்தது. பாடல் வெளியான ஒரு சில நாட்களில் யூடியூபில் மட்டும் 20 லட்சம் பார்வைகளை வசப்படுத்தியிருக்கிறது.
ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் எழுத்தாளர் இளங்கோ கிருஷ்ணன் எழுதியிருக்கும் இந்தப் பாடலை, சத்ய பிரகாஷ் மற்றும் விஎம் மகாலிங்கம் பாடியுள்ளனர். இப்பாடல் எழுதப்பட்டது குறித்து எழுத்தாளர் இளங்கோ கிருஷ்ணன், தனது முகநூல் பக்கத்தில், "இந்த ஆல்பத்திலேயே மிகக் குறைவான நேரத்தில் எழுதிய பாடல் இதுதான். ஒரு மணி நேரத்தில் எழுதி முடித்தோம்.
அது லாக்டவுனின் தொடக்க நாட்கள். எனக்கு சிறுநீரகக் கல்லால் வலி ஒருபுறம். மருத்துவமனைக்குக்கூட செல்லவியலாத நெருக்கடி மறுபுறம் என அப்போது தடுமாறிக்கொண்டிருந்தேன். (இப்போது குணமாகிவிட்டது) அந்தச் சூழலில்தான் ஜூம் மீட்டிங்கில் அமர்ந்து எழுதினோம்.
பின் மதியம் நான்கு மணி போல எழுதத் தொடங்கி கடகடவென முடித்தோம். போர்கள வெற்றிக் கொண்டாட்டம், மது, அது உருவாக்கும் அவளின் நினைவு, வலி, அங்கிருந்து வெறிகொண்டு மீண்டும் போர்க்களத்துக்குள் நுழைதல் என இந்தப் பாட்டின் தேவையை மிக விரிவாக இயக்குநர் எடுத்துரைத்தார். அதனால் எழுத எளிதாக இருந்தது" என்று பதிவிட்டிருந்தார்.
சோழர்களின் கொடியில் உள்ள புலியை சோழ அரசர்களுக்கு உவமையாக வைத்துதான் இந்தப் பாடல் எழுதப்பட்டுள்ளது.
"வரி வரி புலி அஞ்சாதடா
துஞ்சாதடா சோழா சோழா
மற மற புலி வீழாதடா
தாழாதடா சீலா சீலா
வீரம் மானம்
புலி மகன் இரு கண்ணல்லோ
ஏரே வாடா
பகை முகம் செகும் நேரம் வீரா" என்று ஆதித்த கரிகாலனின் போர்க் குணத்தை பறைசாற்றும் வரிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.
இதே பாட்டில் நந்தினியை நினைத்து ஆதித்த கரிகாலன் பாடும் வகையில் இடம்பெற்றுள்ளன. அவை:
"மண்ணான மண் மேல் பித்தானேன்
விண்ணாளும் கொடி மேல் பித்தானேன்
கண்ணான குடி மேல் பித்தானேன்
பெண்ணான பெண்ணாலே பித்தானேன்
அரக்கி எனது தேயமும் காயமும் நீயடி
உடல் உடல் உடல் முழுக்க
செருகளத்து வடு வடு வடுவிருக்க
ஒருத்தி தந்த வடுமட்டும் உயிர் துடிக்க
வருடமென்ன கொடு
சோமரசம் குடடா மரடா"
இந்த வரிகள் ரசிகர்களிடம் இப்படத்தை பார்க்கும் ஆவலை மேலும் தூண்டும் வகையில் எழுதியிருக்கிறார் இளங்கோ கிருஷ்ணன்.
இப்பாடலில் இடம்பெற்றுள்ள சொற்களுக்கு பொருள் தேடிய பலரும் பரி - குதிரை; அடுகளம் - போர்க்களம்; சீலா - குணமுடையவன், வீரன், தோழன்;
செகும் - அழி, ஆக்கிரமி; புவிநிலம் - உலகம்; தேயம் - நாடு, இடம், உடல், பொருள், களவு, அழகு, புகழ், அறிவு, பெருமை, வீரியம்; சோமரசம் - கள்ளு; அக முக நக- உள்ளம் முகம் சிரிப்பு; இக பரம் - பூலோகம் மேலோகம்; இன்னா - இன்னல் என்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
பகைவரை வெற்றி கண்ட போர்க்களத்தில் இடம்பெறும் பாடல் என்பதால், யாழ், பறை, முரசு எக்காளம், கொம்பு, தோல் கருவிகள் உள்ளிட்ட இசைக் கருவிகள் இந்தப் பாடலில் பயன்படுத்தப்பட்டுள்ளன. 3.45 நிமிடம் ஓடும் இந்தப் பாடலில் தவில் போன்ற இசைக்கருவியின் தாளநடை பாடலை தலையாட்டி ரசிக்க வைக்கிறது.
சேவூரில் பாண்டிய மன்னனுக்கும் இரண்டாம் பராந்தகனுக்கும் பெரும்போர் நடந்தது. இந்தப் போரைத் தலைமை ஏற்று நடத்திவர் இளவரசர் ஆதித்த கரிகாலன். தன் வீரதீர செயல்களால் பாண்டியரைத் தோற்கடித்து சோழர்களுக்கு வெற்றியைத் தேடித் தந்தார். இதைப்பற்றி விழுப்புரம் எசலாம் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு சுந்தர சோழனின் மகனும், ராஜராஜனின் சகோதரனுமாகிய ஆதித்த கரிகாலனின் வீரத்தை இவ்வாறு கூறுகிறது:
"ராஜராஜனுடன் பிறந்தவனாகிய ஆதித்த கரிகாலன், வீரலட்சுமியால் அணைக்கப்பட்டவனாக, பாண்டிய மன்னனைப் போர்க்களத்தில் கொன்று அவனுடைய தலையைக் கொய்து, தஞ்சாவூர் கோட்டை வாயிலில் இருந்த பெரிய மரக்கழியின் உச்சியில் செருகிவைத்து, ஏழுகடலை இடையணியாக கொண்ட பூமியை அவ்விளவயது மன்னன் ஆண்டு வந்தான்."
"இந்த கள்ளும் பாட்டும் ரத்தமும் போர்க்களமும்... எல்லாமே அதை மறக்கத்தான், அவளை மறக்கத்தான், என்னை மறக்கத்தான்" என ஏழுகடலை இடையணியாக அணிந்த ஆதித்த கரிகாலனையே புலம்பவிட்ட நந்தினியைக் காண, ஏர் பாட்ஸ் (Air Pods)அணிந்த இளைஞர் பட்டாளமும் காத்துக் கிடக்கிறது, 30-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படைப்பிற்காக.
இணைப்பு: Chola Chola - Lyric Video