

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்திருக்கும் 'நெஞ்சம் மறப்பதில்லை' திகில் படம் மூலம் கோலிவுட்டுக்குத் திரும்பியுள்ள நாயகி ரெஜினா, படத்தின் மரியம் கதாபாத்திரம் என்னுடைய கனவுப் பாத்திரம் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்துத் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள ரெஜினா, ''எப்போதும் என்னுடைய கனவுப் பாத்திரம் என்ன என்று எனக்குள்ளே கேட்டுக்கொண்டே இருப்பேன். 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தின் மரியம் பாத்திரம் அதைப் பூர்த்தி செய்துள்ளது. செல்வராகவன் சாரின் நம்பிக்கைக்கும் வழிகாட்டலுக்கும் நன்றி!'' என்று கூறியுள்ளார்.
இப்படத்தில் ரெஜினா வீட்டு வேலை செய்யும் மரியம் என்னும் பெண்ணாக வருகிறார். அவரின் இறப்புக்குப் பிறகு பழிவாங்க, பேயாக வருவதாகவும், தமிழ் திரையுலகில் இதுவரை வெளியான பேய்ப்படங்களை ஒப்பிடும்போது, இப்படம் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும் என்றும் படக்குழு சார்பில் கூறப்படுகிறது.
'கான்' படம் ஒத்தி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யா நடிக்க 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தை துவங்கினார் இயக்குநர் செல்வராகவன். ரெஜினா, நந்திதா உள்ளிட்ட பலர் எஸ்.ஜே.சூர்யாவுடன் நடித்து வந்தார்கள்.
ஈ.சி.ஆர். சாலையில் உள்ள பங்களாவில் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டன. செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் முதல் பேய் படம் இது. இப்படத்தை கெளதம் மேனன் மற்றும் மதன் இருவரும் இணைந்து தயாரித்து வருகிறார்கள். நீண்ட நாட்கள் கழித்து செல்வராகவனுடன் இசைக்கூட்டணி அமைத்திருக்கிறார் யுவன்.