ரஜினியின் மூன்று முகம் ரீமேக்கில் லாரன்ஸ்
ரஜினிகாந்த் நடிப்பில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'மூன்று முகம்' படத்தின் ரீமேக்கில் ராகவா லாரன்ஸ் நடிக்கவிருக்கிறார்.
ரஜினிகாந்த், செந்தாமரை, ராதிகா, டெல்லி கணேஷ், தேங்காய் சீனிவாசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'மூன்று முகம்'. 1982-ம் ஆண்டு வெளியான இப்படத்தை ஜகநாதன் இயக்கியிருந்தார். ஷங்கர் கணேஷ் இசையமைத்த இப்படத்தை தமிழழகன் மற்றும் தியாகராஜன் ஆகிய இருவரும் தயாரித்திருந்தனர். ரஜினிகாந்த் நடிப்பில் வரவேற்பு பெற்ற படங்களில் இந்தப் படம் மிக முக்கியமான படமாக கருதப்படுகிறது.
இப்படத்தின் ரீமேக் குறித்து அவ்வப்போது செய்திகள் வெளியாகி வந்தன. தமிழ் திரையுலகின் முன்னணி நாயகர்கள் பலரும் இப்படத்தின் ரீமேக்கில் நடிக்க முயற்சி செய்தனர். ஆனால், அந்த முயற்சிக்கு பலன் கிட்டவில்லை.
தற்போது 'மூன்று முகம்' படத்தின் ரீமேக் உரிமையைக் கைப்பற்றி நாயகனாக நடிக்கவிருக்கிறார் ராகவா லாரன்ஸ். ஸ்ரீ ராகவேந்திரா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் இயக்குநர் மற்றும் நடிகர், நடிகைகள் இதர தொழில்நுட்பக் கலைஞர்கள் முடிவாகவில்லை.
விரைவில் அனைத்தும் முடிவு செய்து அறிவிக்கப்பட இருப்பதாக ராகவா லாரன்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் தயாரிப்பு உறுதுணையில் எஸ்.கதிரேசனும் பணியாற்ற இருக்கிறார்.
