

'வலிமை' படத்திற்கு பிறகு நடிகர் அஜித்குமார் மீண்டும் இயக்குநர் ஹெச்.வினோத்துடன் கைகோத்துள்ளார். இன்னும் தலைப்பிடப்படாத இந்தப் படம் 'ஏகே61' என அழைக்கப்படுகிறது. அஜித் ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்து வருகிறார். 'ஏகே61' படத்தின் படப்பிடிப்பைத் தொடர்ந்து நடிகர் அஜித் ஐரோப்பாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தொடர்ந்து விசாகப்பட்டினத்தில் நடந்த ஷூட்டிங்கில் நடிகர் அஜித் கலந்துகொண்டார். அடுத்தக்கட்ட ஷூட்டிங் பாங்காங்கில் நடைபெறும் என கூறப்பட்ட நிலையில், தற்போது அது தாமதமாகி வருகிறது. இந்த இடைவெளியில் நடிகர் அஜித் ஒரு சின்ன ட்ரிப் சென்றுள்ளார்.
இயற்கை காட்சிகளை ரசித்தபடி செல்லும் அவரது பைக் சாகச பயண புகைப்படங்கள் அவ்வப்போது வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. கார்கில் போர் நினைவிடத்துக்கு சென்றது, ராணுவ வீரர்கள் உடன் இருந்தது, புத்தர் கோவிலுக்கும் சென்று வழிப்பட்டது என அஜித்தின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
இந்நிலையில் புதிதாக ஒரு வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், அஜித்தைத் தேடி ரசிகர்கள் வருகிறார்கள். அப்போது, "சார் உங்களை தேடி தான் மூன்று நாள்களாக அலைகிறோம்" என அவர்கள் சொல்ல, அதற்கு "நான் என்ன கொலைக்காரனா, கொள்ளைக்காரனா?, என்னைத் தேடுகிறீர்கள்" என்று நகைச்சுவையாக கேட்டு ரசிகர்களை சிரிக்க வைக்கிறார். பின்பு அவர்களிடம் அஜித் பேசும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ இப்போது வைரலாகி உள்ளது.
அதேநேரம், அஜித் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வரைப்படத்தையும், அவரின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.