சரத்குமார் நீக்கம்: கார்த்தியிடம் ராதிகா சரமாரி கேள்வி

சரத்குமார் நீக்கம்: கார்த்தியிடம்  ராதிகா சரமாரி கேள்வி
Updated on
2 min read

நடிகர் சங்கத்திலிருந்து சரத்குமார் நீக்கப்பட்டு இருப்பது தொடர்பாக பொருளாளர் கார்த்தியைக் குறிப்பிட்டு ராதிகா பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் சரத்குமார், செயலாளர் ராதாரவி இருவரையும் நீக்குவதற்காக கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்காததால் ஒரு மனதாக நிறைவேறியது. இதனைத் தொடர்ந்து இருவரும் நிரந்தரமாக நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்கள். இதற்கான கடிதம் விரைவில் அனுப்பப்பட இருக்கிறது.

இப்பொதுக்குழுவில் பொருளாளர் கார்த்தி பேசும் போது, "நடிகர் சங்க அறக்கட்டளையில் சரத்குமார் மற்றும் ராதாரவி இருவரும் தாங்களே நிரந்தர அறங்காவலர்கள் என நியமித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு யாருடைய ஒப்புதலையும் பெறவில்லை. இதனை மாற்றி எழுத ஒப்புதலைக் கோருகிறேன்" என்ற போது யாருமே எதிர்ப்பு தெரிவிக்காததால் ஒருமனதாக நிறைவேறியது. அதுமட்டுமன்றி முன்னாள் நிர்வாகிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கார்த்தி முன்வைத்தார்.

சரத்குமார், ராதாரவி நீக்கம் தொடர்பாக செய்திகள் வெளியானவுடன் ராதிகா சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், "எப்படி நீங்கள் இடை நீக்கம் செய்யலாம்? இரு தரப்பும் கலந்தாலோசிக்காமல் எடுக்கப்பட்ட முடிவு நீதிமன்ற அவமதிப்பாகும். சனிக்கிழமை இடத்தை மாற்றச் சொல்ல எந்த ஆணையருக்கு அனுமதி இருந்தது? அனுமதிச் சான்றை நான் பார்க்க வேண்டும். 21 நாள் நோட்டீஸ் தர வேண்டும். அதை எப்படி மீறினீர்கள்? நான் ஒரு சின்னத்திரை தயாரிப்பாளர். ஒரு பட்டியலிடப்பட்ட நிறுவனத்தை தலைமையேற்று நடத்தி வருகிறேன். ஏன் நிகழ்ச்சி நிரல் தரப்படவில்லை? ஒரு ஆயுட்கால உறுப்பினரான என்னிடம் ஏன் எதையும் தெரிவிக்கவில்லை?" என்று தெரிவித்துள்ளார்.

பொருளாளர் கார்த்தியைக் குறிப்பிட்டு கேள்வி எழுப்பியுள்ள ராதிகா

மேலும் பொருளாளர் கார்த்தியின் ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். அதில், "வாழ்நாள் முழுவதும் அறங்காவலர்களாக இருக்க விரும்பினர் என்று கூறுகிறீர்கள். உங்களிடம் அதற்கான சான்று உள்ளதா என்கிறீர்கள். ஆனால் அது திரும்பப்பெறப்பட்டது என அவர்கள் கூறுகின்றனர். கூட்டத்தில் விவாதித்தவற்றை சொல்ல வேண்டும் என கேட்கின்றனர். அது பெரிய குற்றமா? நடிகர் சங்கம் சிவாஜி கணேசனால் நிறுவப்பட்டது. அறங்காவலரின் குடும்பத்தினர் மட்டுமே அதில் தொடர வேண்டும் என்ற விதி இருந்து அதை நடிகர் எஸ்.எஸ்.ஆர் பிறகு திரும்பப் பெற்றார். அப்படியென்றால் அவர் குற்றவாளியா? உங்களுக்கு வரலாறு தெரியவில்லை என்றால் உங்கள் அப்பாவைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

தனிப்பட்ட விரோதத்தினால் நியாயத்தை மறக்காதீர்கள். நடிகர் சங்க ஆடிட்டரிடமிருந்து ஆட்சேபணை இல்லை என கடிதம் வாங்கினீர்களா? எதையாவது நிரூபித்தீர்களா? எல்லாம் ஆதாரம் இல்லா குற்றச்சாட்டுகள். எல்லாம் முடிவு செய்ய நீங்கள் என்ன நீதிபதியா? எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லுங்கள்.

நடிகர் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினரான எனக்கு ஆதாரத்தைக் காட்டுங்கள். சங்கத்துக்காக உழைத்தவர்கள் மீது அவதூறான குற்றச்சாட்டுகளை வீசாதீர்கள். நடிகர் விஷாலிடம் முதிர்ச்சி இல்லை. நீங்களும் உங்கள் முட்டாள்தனத்தைக் காட்டாதீர்கள். எந்த கணக்கும் ஒப்படைக்கப்படவில்லை என்றீர்கள். உங்களுக்கு அளிக்கப்பட்டது காதல் கடிதங்கள் என நினைத்தீர்களா?

தேர்தல் முடிந்ததும் சரத்குமார், நாசரிடம் அனைத்து கணக்கு வழக்குகளையும் தாஜ் ஹோட்டலில் சந்தித்து அளித்தார். அதற்கான வீடியோ ஆதாரம் உள்ளது. எதற்காவது விளக்கம் கேட்டீர்களா? கேட்டீர்களென்றால் அதை நிரூபியுங்கள்" என்று தெரிவித்திருக்கிறார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in