2K கிட்ஸுக்கும் கன்டென்ட் தரும் வடிவேலுவின் 2 வியத்தகு விஷயங்கள் | பிறந்தநாள் ஸ்பெஷல்
மூன்று பேர் ஓரிடத்தில் கூடியிருந்தால் அங்கு நான்காவது ஆளாக வடிவேல் மறைந்திருப்பார். இரண்டு பேரின் பேச்சுகளுக்கு இடையே வடிவேலுவின் ஏதோ ஒரு டயலாக் நிச்சயம் இடம்பெற்றிருக்கும். அவரை தவிர்த்துவிட்டதொரு மீமை உங்களால் உருவாக்கிவிட முடியாது. 80ஸ், 90ஸ் மட்டுமல்ல 2கே கிட்ஸுக்கும் ஆதர்ச நாயகன் வடிவேலு. அப்படியான ஒரு கலைஞனின் இரண்டு முக்கியமான குணங்கள் பற்றி பார்ப்போம்.
உடல்மொழியால் ஈர்க்கும் கலைஞன்: வடிவேலுவை பொறுத்தவரை அவரது நகைச்சுவை உடல்மொழியை அடிப்படையாக கொண்டது. சொல்லப்போனால் அவரை மக்களிடம் கொண்டு சேர்த்ததும் அந்த உடல்மொழிதான். அந்த உடல்மொழியையே அவர் தனது மொழியிலும் கொண்டு வந்திருப்பார். இதற்கு உதாரணமாக 'கிரி' படத்தில் ரொம்ப நல்லவன் காமெடியை எடுத்துக்கொள்வோம்.
ஆர்த்தியிடம் தான் அடிவாங்கிய கதையை விவரிக்கும்போது, தன் இரண்டு கைகளிலும் ஓரிடத்தில் பேலன்ஸ் செய்துவிட்டு, அடிவாங்கிய களைப்பை முகத்தில் படர விட்டு, வசனத்திற்கிடையே இடைவெளிவிட்டு, 'மூச்சு திணற திணற' என அவர் சொல்லும்போது உடல்மொழியின் நெளிவை வசனத்திலும் கொண்டுவந்து அதகளம் செய்திருப்பார்.
அந்தக் காட்சி இறுதியை நெருங்கும்போது உடல்மொழியை வசனத்துடன் பொருத்தி அந்த டெம்பை ஏற்றி 'ரொம்ப நல்லவன்னன்னு சொல்லிட்டாம்மம்மமாஆஆ' என தன் வசனத்தில் மொழியில் மாற்றத்தை அரங்கேற்றி நடிப்பில் உச்சம் தொட்டிருப்பார். அப்படி உடல்மொழியை மட்டுமல்லாமல், அதை தன்னுடைய மொழிநடையிலும், நெளிவு, சுளிவுகளை ஏற்ற இறங்கங்களை குறிப்பிட்ட மீட்டருக்குள் பொருந்த வைத்த கலைஞன். அதேபோல, 'வேணாம்.. வலிக்குது அழுதுருவேன்', 'எனக்கு கோபம் வராது...’ போன்ற வசனங்களை தன்னுடைய தனித்துவமான மொழியின் நெளிவு மூலம் ரசிக்க வைத்தவர்.
படத்துக்கு படம் மாற்றும் உடல்மொழியுடன் ஈர்ப்பது மட்டுமல்லாமல், கதாபாத்திரங்களுக்குள் வித்தியாசப்படுத்தும் கலை வடிவேலுக்கு வாய்க்கப்பெற்றது. 'என்னம்மா கண்ணு' படத்தில் 'டெலக்ஸ் பாண்டியன்' கதாபாத்திரத்தில் போலீசாக நடித்திருப்பார் வடிவேலு. அதே போலீஸ் கதாபாத்திரத்தை 'மருதமலை' படத்திலும் ஏற்றியிருப்பார். இரண்டுக்குமான வித்தியாசத்தை வெளிப்படுத்தும் இடத்தில் தனித்து நிற்பார் வடிவேலு.
'நகரம்', வின்னர் படத்தின் 'கைபுள்ள' மற்றும் 'தலைநகரம்' படத்தின் 'நாய்சேகரு' ஆகியவை ஒரே வகையறா கேரக்டர்கள் என்றாலும் அதனை தனது தனித்த உடல் மொழியின் மூலம் ஃப்ரஷ்ஷாக திரைக்கு கொண்டு வந்தவர் வடிவேலு.
கட்டுடைப்பை நிகழ்த்தியவர்: பெண்களிடம் அடிவாங்குவது அவமானம் என்பது பொதுபுத்தி. அண்மையில் வந்த ‘விருமன்’ படம் வரை 'பொம்பளை மாதிரி அடிவாங்கிட்டு வந்திருக்க' போன்ற வசனங்கள் பெண்கள்தான் அடிவாங்க பிறந்தவர்கள் என்ற ரீதியில் கட்டமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இதுபோன்ற கட்டமைப்புகளை அனாசயமாக உடைத்தவர் வடிவேலு. அவரது குடும்பப் படங்களை எடுத்துக்கொண்டால் மனைவியிடம் அடிவாங்கவும், அவமானப்படவும் தயங்கியதே கிடையாது. கோவை சரளாவிடம் அவர் வாங்கிய அடிகள் ஆண் ஆதிக்கத்துக்குமான அடிகளாகத்தான் பார்க்க முடியும். காரணம், எத்தனை ஹீரோக்கள் நாயகிகளிடம் அடிவாங்கியிருக்கிறார்கள் என்பதை இந்த இடத்தில் கவனிக்கவேண்டும்.
கவுண்டமணி கூட வீட்டுக்குள் மனைவியிடம் அடிவாங்கி விட்டு வெளியில் வந்து உதார் விடுவார். ஆனால், வடிவேலுவின் படங்களை எடுத்துக்கொண்டால் அவர் பொதுவெளியில் மனைவியால் வெளுக்கப்படுவார். மனைவி மட்டுமல்லாமல், 'தாஸ்' படத்தில் வேலைக்கார பெண் என சமூகத்தின் அனைத்து தரப்பு பெண்களிடமும் அடிவாங்கிய கலைஞன் வடிவேலாகத்தான் இருக்க முடியும். அனைத்துப் பெண்களாலும் அவமானத்திற்கும், ஏளனத்திற்கும் உள்ளான பாத்திரங்களில் எந்த வித தயக்கமுமின்றி தொடர்ந்து நடிக்கும் துணிச்சல் வடிவேலுவுக்கு இருந்தது. தன்னை ஒரு முன்னுதாரணப்படுத்திக்கொண்டார். இப்படியாக வடிவேலு தனக்கென தனிபாதை அமைத்து அதில் முத்திரை பதித்துகொண்ட கலைஞன்.
ஒரு கட்டத்தில் வடிவேலு திரைத் துறையிலிருந்து விலகியிருந்தபோதும், அவர் மறக்கடிக்கப்படவில்லை. மீம்ஸ்களாகவும், வடிவேலு வெர்ஷன் பாடல்களாலும், ஸ்டிக்கர்களாகவும், தன்னை உருமாற்றி வாட்ஸ்அப், ஃபேஸ்புக் வழியாக ஊடுருவியிருந்தவர். தமிழ் மக்கள் அவரை பரிணமிக்கும் டெக்னாலஜிக்கு தகுந்தாற்போல அப்டேட் செய்துவிட்டனர். கரோனா காலத்திலும் இத்துயரோங்கிய வாழ்வில் அகப்பட்டு கிடக்கும் மனிதர்களுக்கு அருமருந்தாக தன்னை அர்பணித்துக்கொண்ட கலைஞனின் பிறந்த நாளில் அவர்ன மீம்ஸ்களின் வழியே வாழ்த்துவோம்.
