திரை விமர்சனம்: நாட் ரீச்சபிள்

திரை விமர்சனம்: நாட் ரீச்சபிள்
Updated on
1 min read

ஆபத்திலிருக்கும் ஒரு பெண், ‘காவலன்’ ஆப் மூலம் அனுப்பிய ‘அலர்ட்’, போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வருகிறது. காவல் ஆய்வாளர் கயல் (சுபா) சம்பந்தப்பட்ட இடத்துக்கு விரைகிறார்.

அங்கு இளம் பெண் கொலையாகிக் கிடக்க, மற்றொரு பெண்ணின் சடலமும் கிடைக்கிறது. இந்த வழக்கை, தடவியல் அதிகாரி விஷ்வா, கயல் ஆகிய இருவரிடமும் ஒப்படைக்கிறார் ஆணையர்.

தம்பதியான இருவரும் விவாகரத்துக்கு விண்ணப்பித்துவிட்டுக் காத்திருப்பவர்கள். சிக்கலான இந்த வழக்கை, வாழ்க்கையைச் சிக்கலாக்கிக்கொண்ட இருவரும் எப்படிக் கண்டுபிடித்தார்கள் என்பது கதை.

என்ன காரணத்துக்காகக் கொலைகள் நடந்திருக்கும், யார் கொலையாளி என்பதை நோக்கி, கிடைக்கும் தடயங்களைக் கொண்டு விசாரிப்பதை நேர்த்தியான திரைக்கதை மூலம் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் சந்துரு முருகானந்தம்.

கொலையாளி யார் என்பதை ஊகித்துவிட வாய்ப்புத் தராமல், காட்சிகளை அடுக்கிய வகையில், படத்தொகுப்பு பணியையும் கவனித்திருக்கும் இயக்குநரின் திறமை பளிச்சிடுகிறது.

‘காவலன்’ செயலி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் காட்சி அமைத்துள்ளதைப் பாராட்டலாம். தன்பாலின ஈர்ப்பாளர்கள் குறித்த புரிதலும்ஏற்பும் மக்கள் மத்தியில் குறைவாக உள்ள சூழலில் அவர்களை ஆதரித்திருப்பதையும் வரவேற்கலாம்.

ஒளிப்பதிவு (சுகுமாரன் சுந்தர்), வண்ணக் கலவை, கலை இயக்கம் (ஜெகதீஷ்), பின்னணி இசை (சரண்குமார்) உட்பட தொழில்நுட்ப ரீதியாக படம் வலிமையாக உருவாக்கப் பட்டிருக்கிறது.

விஷ்வா, கயலாக வரும் சுபா,ஹேமாவாக வரும் சாய் தன்யா உள்ளிட்டபுதுமுகங்கள், முதல் படம் என்பதே தெரியாதபடி நடித்திருக்கிறார்கள்.

கொலையாளி யார் என்பதை கண்டுபிடித்ததும் படமும் முடிந்துவிடுகிறது. அதன்பின்னர் நகரும் 15 நிமிட இறுதிக் காட்சிகளுக்கு கத்தரி போட்டிருக்கலாம்.

தடயவியல் அதிகாரியை ஒரு கொலை வழக்கை விசாரிக்கும் அணியில் முதன்மை அதிகாரியாக நியமிப்பார்களா என்பது கேள்விக் குறி. இந்தத் தர்க்கப் பிழையைக் கடந்து, விறுவிறுப்பு குறையாமல் கதையைக் கொண்டு சென்றதில் ‘நாட் ரீச்சபிள்’ ஒரு ‘வாச்சபிள்’ க்ரைம் த்ரில்லர் ஆகிவிடுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in