

''சமீபத்தில் வெளியான 'லைகர்' படத்தை மிகுந்த எதிர்பார்ப்புடன் தான் தமிழகத்தின் ரிலீஸ் செய்தேன். ஆனால் அது ஓரளவுக்குத்தான் போனது'' என ஆர்.கே.சுரேஷ் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜயகாந்தை வைத்து 'கண்ணுப்பட போகுதய்யா' படத்தை இயக்கிய பாரதி கணேஷ் இயக்கும் புதிய படத்தில் நாயகனாக ஆர்.கே.சுரேஷ் ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தின் துவக்கவிழா பூஜை நேற்று நடைபெற்றது.இந்த நிகழ்வில், இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர்கள் ராதாரவி, சந்தானபாரதி, சாம்ஸ், டேனியல் ஆனி போப் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதில் கலந்துகொண்டு பேசிய ஆர்.கே.சுரேஷ், ''இயக்குநர் பாரதி கணேஷ் என் தந்தை காலத்தில் இருந்தே எனக்கு நெருக்கமானவர். எப்படி விஜயகாந்த்தின் வெற்றிக்கு அவர் முதுகெலும்பாக இருந்தாரோ, அதேபோல தான் எனக்கும். அவர் சொன்ன மூன்று கதைகளில் இந்த கதை ரொம்ப பிடித்திருந்ததால் முதலில் இதை படமாக்க தீர்மானித்தோம். இந்த படத்தை எப்படியும் வெற்றிப்படமாக்க வேண்டும் என ஒரு வெறியுடன் இருக்கிறார் இயக்குநர் பாரதி கணேஷ்.
நான் நடித்த 'விசித்திரன்' படம் கிட்டத்தட்ட அமேசான் பிரைமில் ஒருகோடி பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது. நான் தயாரித்த 'மாமனிதன்' திரைப்படத்தை தியேட்டரில் வெளியிட்டபோது இரண்டரை கோடி ரூபாய் தான் கிடைத்தது. ஆனால் அதுவே ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியிட்டபோது 64 லட்சம் பேர் பார்த்துள்ளனர். அந்தவகையில் கிட்டத்தட்ட 24 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. ஆஹா தமிழ் ஓடிடி தளத்திலேயே அதிக வசூல் செய்த படம் அதுதான்.
என்னிடம் படம் ரிலீஸ் செய்யச்சொல்லி வருபவர்களிடம் படத்தை பார்த்ததும் நானே சில படங்களை தியேட்டருக்கு வேண்டாம், ஓடிடிக்கு கொடுத்து விடுங்கள் என சொல்லிவிடுகிறேன். ஏனென்றால் ஓடிடிக்கு என எடுக்கும் படத்தை தியேட்டருக்கு தூக்கிட்டு போகக்கூடாது. படம் எடுக்கும்போதே எதில் திரையிட போகிறோம் என்பதை முடிவு செய்துவிட வேண்டும்.. இங்கே எட்டு நடிகர்களுக்கு மட்டும் தான் தியேட்டர்களில் நல்ல புக்கிங் மற்றும் ஓப்பனிங் இருக்கிறது.
மாதாமாதம் எனது நிறுவனத்தின் வெளியீடாக ஒரு படமாவது வெளியாகிக்கொண்டுதான் இருக்கிறது. சமீபத்தில் வெளியான 'லைகர்' படத்தை மிகுந்த எதிர்பார்ப்புடன் தான் தமிழகத்தின் ரிலீஸ் செய்தேன். ஆனால் அது ஓரளவுக்குத்தான் போனது. ஓடிடி கன்டெண்டா? தியேட்டர் கன்டெண்டா? எனப் பார்த்து ஒரு படத்தை வெளியிட வேண்டும். அதுதான் புத்திசாலித்தனம்'' எனக் கூறினார்.