

''குழந்தை கடத்தல் கதை தமிழ் சினிமாவுக்கு புதியது அல்ல. ஆனால் யதார்த்த வாழ்க்கையில் எந்த அளவுக்கு இந்த மாதிரியான சம்பவங்கள் தொடர்பு உடையதாக இருக்கிறது என்பதை உண்மைத் தன்மையோடு சொல்லி இருக்கிறோம்'' என ட்ரிக்கர் படத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
அதர்வா நடிக்கும் 'ட்ரிக்கர்' படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. படம் வரும் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. 'குருதி ஆட்டம்' படத்தைத் தொடர்ந்து 'டார்லிங்', 'கூர்கா' படங்களை இயக்கிய சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் படம் 'ட்ரிக்கர்'. பிரதீக் சக்ரவர்த்தி மற்றும் ஸ்ருதி நல்லப்பாவின் பிரமோத் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
அதர்வாவுடன் தான்யா ரவிச்சந்திரன், அருண் பாண்டியன், முனிஷ் காந்த உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு 'இரும்புத்திரை', 'ஹீரோ' படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் வசனம் எழுதியுள்ளார்.
இந்த படம் தொடர்பாக இயக்குநர் சாம் ஆன்டன் கூறியதாவது: "தயாரிப்பாளர் படம் சிறப்பாக வர வேண்டும் என்பதால் முழு சுதந்திரம் கொடுத்து அதிக முதலீடு செய்தார். தயாரிப்பு நிறுவனத்தின் நம்பிக்கைக்கு நியாயம் சேர்த்திருப்பதாக நினைக்கிறேன். இது சண்டை படமாக இருந்தாலும் அனைத்து தரப்பு ரசிகர்களும் விரும்பும் வகையில் இருக்கும். குழந்தை கடத்தல் கதை தமிழ் சினிமாவுக்கு புதியது அல்ல.
ஆனால் யதார்த்த வாழ்க்கையில் எந்த அளவுக்கு இந்த மாதிரியான சம்பவங்கள் தொடர்பு உடையதாக இருக்கிறது என்பதை உண்மைத் தன்மையோடு சொல்லி இருக்கிறோம். கதைக்காக பல ஆய்வுகளை செய்தோம். கடத்தப்படும் குழந்தைகளின் மனநிலை எவ்வாறு இருக்கும் என்பதை உளவியல் பார்வையில் சொல்லி உள்ளோம். போலீஸ் துறையில் அன்டர் கவர் ஆபீஸராக வருகிறார் அதர்வா. அவருக்கு ஜோடியாக தான்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார்.
அப்பா மகன் கதையான இதில் அருண்பாண்டியன் சார் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். அதர்வா சண்டைக் காட்சிக்காக அதிக மெனக்கடல் எடுத்தார். ஐந்து சண்டைக் காட்சிகள். ஒவ்வொன்றறையும் வித்தியாசமான கோணத்தில் சண்டை இயக்குநர் திலீப் சுப்பராயன் கம்போஸ் பண்ணிக் கொடுத்தார். ஜிப்ரான் இசை படத்துக்கு பலம் சேர்க்கும் விதமாக இருக்கும்.படத்தின் உச்சகட்ட காட்சிகள் பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தும்" என்றார்.