

புதிய படங்களைப் பார்க்கும் போது திரையுலகினரின் மனநிலை குறித்து ஒளிப்பதிவாளர் ரிச்சர்டு எம்.நாதன் காட்டமாக தனது கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 28-ம் தேதி 'காஷ்மோரா', 'கொடி', 'கடலை' மற்றும் 'திரைக்கு வராத கதை' உள்ளிட்ட படங்கள் திரைக்கு வந்திருக்கின்றன. இப்படங்களைப் பார்த்துவிட்டு, திரையுலகினர் பலரும் தங்களுடைய கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் ஒளிப்பதிவாளர் ரிச்சர்டு எம். நாதன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் திரையுலகினரைப் பற்றி காட்டமாக பதிவு செய்துள்ளார். அதில் "கடந்த 2 நாட்களாக துறை நண்பர்களிடம் ’கொடி’ மற்றும் ’காஷ்மோரா’ குறித்து கேட்டுக்கொண்டிருக்கிறேன். யாரும் எந்த படத்தைப் பற்றியும் நல்ல விதமாக எதுவும் சொல்லவில்லை.
இன்று நான் இரண்டு படங்களையும் அடுத்தடுத்து பார்த்தேன். முழுவதும் ரசித்தேன். பெரும்பாலான துறை நண்பர்கள் முதல் நாள் முதல் காட்சி ஒரு படத்தைப் பார்த்துவிடுவார்கள் என நினைக்கிறேன். படம் நன்றாக ஓட வேண்டும் என்பதற்காக அல்ல, கண்டிப்பாகப் படம் நன்றாக இல்லை தானே என்பதை உறுதி செய்துகொள்வதற்காக.
ஒரு திரைப்படத்தின் காட்சிகள் ஆச்சரியப்படுத்தும்போது எனக்கு அந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் மீது சில சமயம் பொறாமை ஏற்படுவதுண்டு, ஆனால் அவர்கள் எனது போட்டியாளர்களாக மாறுவார்களே தவிர, எதிரிகளாக அல்ல. அவர்களை எனது போட்டியாளராக கருதும்போது அது என்னை முதிர்ச்சியாக்கி எனது அறிவை மேம்படுத்திக்கொள்ள உதவும்.
’காஷ்மோரா’, ’கொடி’ போன்ற படங்கள் என் நண்பர்களை பொழுதுபோக்காது என்றால் இந்த உலகத்தில் வேறெது அவர்களை ஆச்சரியப்படுத்தும் எனத் தெரியவில்லை.
குறிப்பு: இயக்குநர்கள் கோகுல் மற்றும் துரை செந்தில்குமார் இருவரிடமும் எனக்கு இதுவரை அறிமுகம் இல்லை." என்று தெரிவித்திருக்கிறார்.
'அங்காடித் தெரு', 'கோ', 'வணக்கம் சென்னை', 'த்ரிஷா இல்லனா நயன்தாரா', 'கத்தி சண்டை' உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் ரிச்சர்டு எம்.நாதன் என்பது குறிப்பிடத்தக்கது.