

அதர்வா நடிக்கும் 'ட்ரிக்கர்' படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. படம் வரும் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. 'குருதி ஆட்டம்' படத்தைத் தொடர்ந்து 'டார்லிங்', 'கூர்கா' படங்களை இயக்கிய சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் படம் 'ட்ரிக்கர்'. பிரதீக் சக்ரவர்த்தி மற்றும் ஸ்ருதி நல்லப்பாவின் பிரமோத் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
அதர்வாவுடன் தான்யா ரவிச்சந்திரன், அருண் பாண்டியன், முனிஷ் காந்த உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு 'இரும்புத்திரை', 'ஹீரோ' படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் வசனம் எழுதியுள்ளார். குழந்தைக் கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
ட்ரெய்லர் பார்வை: முன்பே சொன்னது போல படம் குழந்தை கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருப்பதை ட்ரெய்லர் உணர்த்துகிறது. இந்த கதைக்கரு தமிழ் சினிமாவுக்கு புதியதில்லை என்றாலும், இந்தப் படம் புதிய கோணத்தில் கதையை நகர்த்தியிருக்கும் என்ற நம்பிக்கையை கொடுக்கிறது ட்ரெய்லர் காட்சிகள்.
காவல் துறையில் ரகசிய உளவாளியாக அதர்வாவுக்கு அப்பாவாக அருண் பாண்டியன் நடித்துள்ளார். திலிப் சுப்புராயன் சண்டைகாட்சிகளும், ஜிப்ரானின் 'ட்ரிக்கர் ட்ரிக்கர்' பாடலும் பிண்ணனி இசையும் கவனம் பெறுகிறது. போலவே, 'நெருப்பு மட்டும் தான் வேற ஒண்ண அழிச்சிட்டுதான் வாழும்' என்ற பி.எஸ்.மித்ரனின் வசனம் ஈர்க்கிறது.