

எழுத்தாளர் சு.வெங்கடேசன் எழுதிய 'வேள்பாரி' நாவலை படமாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா தற்போது நாவல்களின் பக்கம் கரை ஒதுங்கியுள்ளது. 'பொன்னியின் செல்வன்', 'விடுதலை' படங்கள் நாவல்களை அடிப்படையாக கொண்டு உருவாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது மதுரை எம்.பியும், எழுத்தாளருமான சு.வெங்கடசேன் எழுதிய 'வேள்பாரி' நாவல் படமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நாவலை படமாக்கும் முயற்சியில் தனுஷ், வெற்றிமாறன் ஈடுபட்டதாக முன்னதாக கூறப்பட்டது. அது ஈடேறாமல் போனது.
இதையடுத்து, தற்போது ‘வேள்பாரி’ கதையை இயக்குநர் ஷங்கர் மிக பிரமாண்ட முறையில் படமாக்க இருப்பதாகவும், இதில் சூர்யா நடிக்க ஆர்வம் காட்டி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில், மதுரையில் நடைபெற்ற 'விருமன்' பட விழாவில் கலந்துகொண்ட எழுத்தாளர் சு.வெங்கடேசனுடன் ஒரு சுவாரஸ்ய பயணம் ஆரம்பித்து விட்டதாகவும், விரைவில் அது குறித்தான அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் அவர் கூறியிருந்தார்.
மேலும், நேற்று நடிகர் சூர்யாவின் 42-வது படமாக இயக்குநர் 'சிறுத்தை' சிவாவுடன் இணையும் படத்தின் மோஷன் போஸ்டரும் வெளியிடப்பட்டது. இதுவும் 3டி-யில் சரித்திரப் படமாக உருவாகி வருகிறது. 'வேள்பாரி'க்கு முன்னதாகவே, இந்தப் படம் ஒரு ட்ரெயலாக இருக்கும் என கூறப்படுகிறது. எழுத்தாளர் சு.வெங்கடேசன்- சூர்யா இணையும் படம் குறித்து விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கலாம்.
இந்தப் படம் ரூ.1,000 கோடியில் ‘பான் இந்தியா’ முறையில் உலகம் முழுவதும் வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்து அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. ஷங்கர் தற்போது கமலை வைத்து 'இந்தியன் 2' மற்றும் ராம்சரணை வைத்து 'ஆர்சி15' படங்களை இயக்கி வருகிறார். இதையடுத்து சூர்யாவுடன் இந்த கதைக்காக ஷங்கர் இணைவார் எனத் தெரிகிறது.