

பாடலாசிரியர் கபிலன் மகள் தூரிகை மறைவுக்கு எழுத்தாளர்கள், திரையுலகைச் சேர்ந்தவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமாவின் மூத்த பாடலாசிரியர் கபிலன். அவருடைய மகள் தூரிகை கபிலன், பெண்களுக்காக ’Being Women’ என்ற ஆன்லைன் பத்திரிகையை நடத்தி வந்தார். அதில், பல்வேறு தன்னம்பிக்கை கட்டுரைகளையும் எழுதி பலரின் கவனத்தையும் ஈர்த்தவர். அத்துடன், காஸ்டியூம் டிசைனராகவும் இயங்கி வந்த அவர், நடிகர்கள் அசோக் செல்வன், ஜி.வி பிரகாஷ், ரம்யா பாண்டியன் உள்ளிட்டவர்களுக்கு காஸ்டியூம் டிசைன் செய்து வந்தவர்.
இயக்குநர் வசந்தபாலன் தனது 'அநீதி' படத்தில் காஸ்டியூம் டிசைனராக தூரிகையை அறிமுகப்படுத்தினார். 'தற்கொலை எதற்கும் தீர்வல்ல' போன்ற பதிவுகளை தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் ஷேர் செய்திருக்கும் தூரிகை, வெள்ளிக்கிழமை இரவு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அவரது மறைவுக்கு எழுத்தாளர்கள், திரையுலகைச் சேர்ந்தவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கவிஞர் பழனிபாரதி தனது ஃபேஸ்புக் பக்கத்தில், ''கபிலனின் அன்பு மகள் தூரிகையின் தற்கொலை தேற்ற முடியாத பேரிழப்பு. "எந்த ஒரு பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வாகாது" என்று முகநூலில் பதிவிட்ட தூரிகை, இப்படி ஒரு முடிவெடுத்தது பெருந்துயரம். ஆழ்ந்த இரங்கல்'' என பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக இயக்குநர் வசந்த பாலன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், ''என் இயக்கத்தில் தயாராகிக் கொண்டிருக்கும் அநீதி திரைப்படத்தில் ஆடை வடிவமைப்பாளராக தூரிகை கபிலன் வேலை செய்தார். செய்திக் கேட்டு இரவெல்லாம் மனதிற்குள் ஆந்தைகள் கத்தின. வாழ்வு ஏன் இத்தனை துயரத்தைத் தருகிறது'' என பதிவிட்டுள்ளார்.
திராவிடர் கழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் அருள் மொழி தனது ஃபேஸ்புக் பக்கத்தில், ''எத்தனையோ செய்திகளை எழுத முடியாமல் போனது பற்றி வருந்திக்கொண்டிருந்தேன். எதையுமே செய்யமுடியாத மனநிலைக்குள் தள்ளுகிறது இந்தச் செய்தி'' என இரங்கல் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ட்விட்டர் பக்கத்தில், ''புகழ்பெற்ற திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞருமான அன்புத்தம்பி கபிலன் அவர்களின் மகள் தூரிகை அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மனத்துயரமும் அடைந்தேன். தன் உயிருக்கினிய அன்புமகளைப் பறிகொடுத்துவிட்டு, பேரிழப்பில் சிக்கித்தவிக்கும் தம்பியை ஆற்றுப்படுத்தவும் தேற்றவும் சொற்களின்றி கலங்கித்தவிக்கிறேன். கொடுந்துயரில் சிக்குண்டிருக்கும் தம்பி கபிலனுக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் ஆறுதலைத்தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்'' என பதிவிட்டுள்ளார்.
ஆதவன் தீட்சண்யா தனது ஃபேஸ்புக் பக்கத்தில், ''தூரிகை கபிலன் செப்.4 தான் எனக்கு அறிமுகம். ஐஐடியில் செப்.16 நடக்கும் நிகழ்வில் பேச உற்சாகமாக அழைத்தார். இப்போ தற்கொலை. கொடுந்துயர்'' என பதிவிட்டுள்ளார்.
| தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கையை பெற தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கு தொடர்பு கொண்டு பேசலாம். சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம். |