Last Updated : 09 Sep, 2022 09:48 PM

1  

Published : 09 Sep 2022 09:48 PM
Last Updated : 09 Sep 2022 09:48 PM

சினிமாபுரம் - 2 |  சின்ன பசங்க நாங்க - சங்கம் வைத்து உள்ளூர் பிரச்சினைகளை பேசிய கிராமத்து இளைஞர்கள்!

எண்பது, தொண்ணூறு காலத்திய கிராமங்களில் இளைஞர்களும் சங்கங்களும் தவிர்க்க முடியாத ஒன்று. மிகப்பெரிய அரசியல் கொந்தளிப்புகள் எதுவும் இல்லாத அந்த காலக்கட்டத்தில் படிப்பிற்காக நகரங்களுக்கு வந்து சென்ற கிராமத்து இளைஞர்கள் அதுவரை கிராமத்தில் இருந்து பழமைகளை கேள்வி கேட்கத் தொடங்கினார்கள். அதுவும் தனியாளாகத் கேட்காமல் தங்களுக்குள் சங்கம் வைத்து கூட்டாக தட்டிக் கேட்டனர். அரசியல் கட்சிகள், இயக்கங்களைத் தாண்டி அவை ரசிகர் மன்றங்களாக, இளைஞர் மன்றங்களாக இருந்தன. அநேகமாக அன்றிருந்த எல்லா கிராமங்களிலும் இப்படி ஒரு மன்றம் இருந்திருக்கும். மன்றத்து உறுப்பினர்கள் தெருக்குழாய் பிரச்சினைகளில் இருந்து பஞ்சாயத்து வரை பங்கெடுத்து வந்தனர்.

சின்ன பசங்க நாங்க: இப்படி 80ஸ், 90ஸ் கிராமத்து இளைஞர்களின் சங்கத்து வாழ்க்கையை எடுத்துச் சொன்ன படம் ‘சின்ன பசங்க நாங்க’. பட்டணத்தில் படித்து விட்டு தனது கிராமத்திற்கு திரும்பியிருக்கும் இளைஞன் முத்துக்காளை. கல்வி காட்டிய புதிய பாதையால் தன் கிராமத்தின் தவறுகளைத் தட்டிக் கேட்கத் துணிகிறான். அந்த ஊரின் தலைவர் அம்பலம். பரம்பரை பரம்பரையாக ஊர்த் தலைவர் குடும்பம் என்பதால், கிராமத்தையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதில் பெருமிதத்துடன் இருப்பவர். அந்தக் கட்டுப்பாட்டில் சிறிதளவும் குழப்பம் வராமல் பார்த்தும் கொள்பவர். ஊர் மீது அம்பலம் விதித்திருக்கும் கட்டுப்பாட்டில் விரிசல் விழ வைக்கிறது முத்துக்காளையின் இளைஞர் பட்டாளம்.

கதைப்படி முத்துக்காளையை இரண்டு பெண்கள் காதலிக்கிறார்கள். ஒருவர் முத்துக்காளையின் முறைப்பெண் மரிக்கொழுந்து. மாமனை மணப்பதையே லட்சியமாகக் கொண்டு தாலியை இடுப்பிலேயே சொருக்கிக்கொண்டு திரிவார். இரண்டாவது பெண் அம்பலத்தின் தம்பி மகள் பூச்செண்டு. அப்பா அம்பலத்தின் தம்பி என்றாலும் பூச்செண்டின் தாய் திருவிழாக்களில் கரம் ஆடியவள் என்பதால் தம்பியை கொலை செய்து விட்டு அவனது குடும்பத்தை விலக்கி வைத்திருப்பார் அம்பலம்.

இதற்கிடையில், கோர புயல் மழையால் முத்துக்காளையின் கிராமம் கடுமையான பாதிப்புக்குள்ளாகிறது. மக்கள் அனைவரும் வீடிழந்து குடியிருக்க இடம் இல்லாமல் உள்ளூர் கோயிலைத் திறந்துவிடச் சொல்லி அம்பலத்திடம் கேட்கும்போது அவர் அதற்கு மறுத்து விடுகிறார். எதிர்த்துக் கேட்க தைரியம் இல்லாத ஊர்ஜனம் என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கும்போது, கோயில் கதவை உடைத்து உள்ளே போகலாம் என்கிறான் முத்துக்காளை, அதற்கு மறுப்பு தெரிவிக்கும் பூச்செண்டின் தாய், “நீங்கள் உடைத்தால் அது சிக்கலாகும். அம்பலத்தின் தம்பி மனைவி என்ற முறையில் இந்தக் கோயிலில் எங்களுக்கும் பங்கு உண்டு. அதனால் நான் பூட்டை உடைக்கிறேன்” என்று கூறி கோயில் பூட்டை உடைத்து மக்களை கோயிலுக்குள் அனுப்பிக் காப்பாற்றுகிறாள்.

தனது உத்தரவை மீறியதற்காக பஞ்சாயத்தைக் கூட்டும் அம்பலம், ‘கோயிலின் பூட்டை உடைத்ததற்காக பூச்செண்டி தாய்க்கு மொட்டையடித்து கறும்புள்ளி செம்புள்ளி குத்தி ஊரைவிட்டு அனுப்பிவேண்டும். அவளது மகள் பூச்செண்டிற்கு பொட்டுதாலி கட்டி கோயில் தாசியாக்க வேண்டும்’ என்று தீர்ப்பு வழங்குகிறார். இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முத்துக்காளையை பாதிக்கப்பட்டவர்களுக்காக பரிந்து பேச அவன் மாமனா மச்சானா என அம்பலம் கேட்க, மரிக்கொழுந்துவின் இடுப்பில் இருக்கும் தாலியை எடுத்து பூச்செண்டிற்கு கட்டி அவளை தன் மனைவியாக்கி புதிய உறவை உருவாக்குகிறான் முத்துக்காளை. முறை தவறி திருமணம் செய்ததற்காக தம்பியை கொன்ற அம்பலம், தம்பி மகளை என்ன செய்தார்? முத்துக்காளையின் கிராமத்து புரட்சிகள் என்னவானது என்பது மீதிக்கதை.

பாவலர் வரதராஜன் மன்றம்: கிராமத்தின் குற்றங்களை தட்டிக் கேட்கும் முத்துக்காளை அதனைத் தனியாக செய்யவில்லை. இளைஞர்களை ஒன்றிணைத்து ஒரு மன்றம் அமைத்தே அதனைச் செய்வார். அவர்களின் மன்றத்திற்கு பெயர் "பாவலர் வரதராஜன் மன்றம்". எண்பது, தொண்ணூறுகளில் இசைஞானி இளையராஜா தனது இசையின் மூலம் இளைஞர்களிடம் பெரிய தாக்கத்தை எற்படுத்தியிருந்தார். சினிமா நடிகர்களைப் போலவே இன்னும் சொல்லப்போனால் அதனையும் தாண்டி அவருக்கு பெரும் ரசிகர் கூட்டம் இருந்தன. அவர்களுக்கு இளையராஜாவின் அண்ணன் பாவலர் மீதும் பெரும் மரியாதை இருந்தது. அதனை வெளிப்படுத்தும் விதமாக முத்துக்காளை தனது மன்றத்திற்கு பாவலர் பெயரை வைத்திருப்பார்.

சரி, அப்படி அந்த மன்றம் கிராமத்தில் என்னவெல்லாம் செய்தது என்பதை மன்றத்தின் அறிமுகப் பாடல் மூலமாக விளக்கியிருப்பார் படத்தின் இயக்குநர் ராஜ்கபூர். மன்றத்தின் தொடக்க நாளான்று “இந்த பட்டிக்காட்டுல மன்றம் ஆரம்பிச்சி என்னடா பண்ணப்போறீங்க” என கிராமத்தவர்கள் கேட்பார்கள் தொடர்ந்து தங்களின் தேவைகளை இப்படி பட்டியலிடுவார்கள்... “எங்க தெருவுல தண்ணீ பம்பு இல்ல... எங்க தெருவுல விளக்கு எரியல, உள்ளூர் ஆஸ்பித்திரியில நர்ஸ்-ஏ இல்ல... கல்யாணமாகி 4 வருமஷமாகுது எங்களுக்கு குழந்தையே இல்லப்பா...” என்ற ரீதியில் புகார்களை தெரிவிப்பார்கள். வெளிப்பார்வைக்கு ஒரு நகைச்சுவை போல இந்தக் காட்சி தெரிந்தாலும் தங்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு படித்த இளைஞர்களிடம் தீர்வு இருக்கும் என்று அன்றைய கிராமம் நம்பியது. அந்த நம்பிக்கையை அன்றைய இளைஞர் மன்றங்கள் நிறைவேற்றவும் செய்தன.

கூடி பேசிய கலாசாரம்: அன்றைய கிராமங்களில் சாவடி என்ற ஒன்று உண்டு. சில இடங்களில் அம்பலம், வாசக சாலை எனவும் சாவடிகள் அழைக்கப்படுவதுண்டு ஊர் கட்டிடமான இந்த சாவடியில்தான் வேலை இல்லாத நேரங்களில் ஊர்பெரியவர்களின் அரட்டைக் கச்சேரி நடக்கும். ஊர் பெரியவர்கள் உட்கார்ந்து பேச சாவடி இருந்தது என்றால் இளைஞர்களின் அரட்டைக் கச்சேரிக்கு இளைஞர் மன்றங்கள் இருந்தன. வேலை இல்லாத நேரத்தில் வீட்டில் தங்காத இளைஞர்களை மன்றத்தில் பார்க்கலாம். அந்த அளவிற்கு இந்த மன்றங்கள் அன்றைய இளைஞர்களின் வாழ்க்கையில் இரண்டற கலந்திருந்தது.

அதேபோல சங்கத்தில் இருந்த உறுப்பினர்களும் ஒத்த வயதுடைவர்களாக மட்டுமே இருக்கவில்லை. கிராமங்களில் திருமணம் நடத்தி வைக்க ஆளில்லாமல், சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக என திருமண வயதைக் கடந்தவர்களையும், திருமண வயதை எட்டியவுடன் திருமணம் செய்து கொண்டவர்கள் என பலதரப்பட்ட மனிதர்கள் இருந்தார்கள் இவர்கள் அனைவரையும் இந்த இளைஞர் மன்றங்கள் அனைத்து கொண்டன. அந்த உண்மை பாவலர் வரதராஜன் மன்றம் மூலம் சரியாக பதிவாகியிருக்கும். மன்றத்து உறுப்பினர்களாக முரளி, சார்லி, கிங்காங், குமரிமுத்து என ஒரு கவலையான வாலிபர்கள் இருப்பார்கள்.

கிராமத்துச் சிதறல்கள்: உள்ளூர் பிரச்சினைகளில் அன்றைய இளைஞர்கள் கவனம் செலுத்தினார்கள் என்பதற்கு படத்தில் ஒரு காட்சி வரும். அதே நேரத்தில் அந்தக் காட்சி கிராமத்தின் தனித்த கலாசாரமான மழைச் சோறு (ஊரில் சோறு யாசித்து பெறுதல்) எடுத்தல் என்பதையும் பதிவு செய்திருக்கும். எதற்காக, அதாவது நீண்ட காலமாக மழை பெய்யாமல் இருக்கும்போது ஊர்மக்கள் ஒன்றிணைந்து மழைச்சோறு எடுத்தால், இயற்கை மனமிறங்கி மழை பெய்யச் செய்யும் என்பது நாட்டுப்புறத்து நம்பிக்கை. சில ஊர்களில் இது கொடும்பாவி எரிப்பு சடங்காக செய்யப்படுகிறது. அதாவது, ஊரில் இருக்கும் கொடும் பாவியால் தான் மழை பெய்யவில்லை என்று வைக்கோலில் மனித உருவம் (கொடும் பாவி) செய்து அதனை ஊர்வலமாக எடுத்துச் சென்று யாசம் பெற்று அதற்கு இறப்பு சடங்கு செய்வார்கள். படத்தில் முத்துக்காளையின் கிராமத்தில் நீண்ட நாட்களாக மழை பெய்யாத நிலையில், மன்றத்து இளைஞர்கள்,

"சாத்தப்ப்பா... சாத்தப்பா.... மழைய கொஞ்சம் ஊத்தப்பா...
கைகழுவ தண்ணீ இல்ல கட்டெறும்பு மொய்க்குதய்யா...
உங்க காட்டுல பெய்யும் மழ.. எங்க காட்டுல பெய்யணும்
சாத்தப்ப்பா... சாத்தப்பா.... மழைய கொஞ்சம் ஊத்தப்பா...
மழையில்லா பயிர போல
மக்களெல்லாம் காயிரோமே...
சாத்தப்ப்பா... சாத்தப்பா.... மழைய கொஞ்சம் ஊத்தப்பா..." என்று பாடி மழைச்சோறு பெறுவார்கள். சில இடங்களில் இந்தப் பாடல்

"வானத்து ராசாவே
மழையிறங்கும் புண்ணியரே
சோழத்து மக்களேல்லாம் சோத்துக்கு வருகிறோம்..." என்று பாடப்படுகிறது.

இவ்வாறு ஊர்ச்சோறு எடுக்கும்போது, தன்னுடைய மக்கள் எல்லாம் ஒருவேளை கஞ்சிக்கு கூட கையேந்தும் நிலைமைக்கு வந்துவிட்டார்களே என இயற்கை மனமிறங்கி மழை பெய்ய வைக்கும் என்று பாமர மக்கள் நம்பினார்கள்.

அடுத்து கிராமத்துக்கே உரிய பதிவுகளாக பூச்செண்டு பூப்பெய்திய காட்சியையும், அவளுக்கு முத்துக்காளையுடன் திருமணம் நடந்த பின்னர் மறுவீட்டுச் சீர் கொண்டு செல்லும் காட்சியையும் சொல்லலாம். பூச்செண்டு பருவம் அடைந்த பின்னர் நடக்கும் முதல் நீராடலில், “இந்தாடியம்மா முதல் தண்ணீ... தாய்மாமன் முறை தண்ணீ” எனத் தொடங்கி பேசும் காட்சியையும், பூச்செண்டுக்கு மறுவீட்டு பலகாரம் கொடுக்கும்போது சொல்லும் வசனங்களையும் வெறும் சடங்கு சாங்கியமாக மட்டும் கடந்து விட முடியாது.

இளையராஜா: படத்திற்கு இசை இளையராஜா. இசையுலகில் அவர் கொடிகட்டி பறந்த சமயத்தில் வந்ததது இந்தப் படம். இளையராஜா, முரளி, ரேவதியின் தேதிகளுடன் திட்டமிடப்பட்ட படம் ஏதோ காரணத்தால் நின்று விட, தேதிகளை வீணாக்காமல் படத்தை இயக்கும் வாய்ப்பு ராஜ்கபூருக்கு வந்ததாக கூறப்படுவதுண்டு. அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட இயக்குநர், சரியான கதையை பிடித்து பெரிய ஹிட் கொடுத்திருப்பார். ஆனாலும், அதற்குப் பிறகு பெயர் சொல்லும் அளவிற்கு அவரால் படம் எடுக்க முடியவில்லை. அன்று படத்தை பட்டி தொட்டி எல்லாம் கொண்டு சேர்த்ததில் பெரிய பங்கு இசைக்கு உண்டு. ‘வெளக்கு வச்சா’ என்ற மலேசியா வாசுதேவன் பாடிய பாடல், ‘என்ன மானமுள்ள பொண்ணுன்னு’ என ஜானகியின் குரலில் ஒலிக்கும் பாடல் இப்போதும் அன்றைய இளைஞர்களின் ஆல் டைம் ஃபேவரிட்.

அதேபோல, தன் நண்பனுக்கு சாதி மறுப்பு திருமணம் செய்து வைக்கும் முத்துக்காளை, அம்பலத்திற்கு எதிரான தனது வருகையை பறையிசையின் மூலம் அறிவிக்கும் காட்சி இளையராஜாவின் பின்னணி இசைப் புரட்சிக்கு ஒரு சாட்சி. அம்பலம் வீடு இருக்கும் தெருவில் மேளம் அடிக்கக்கூடாது என்ற கட்டுப்பாட்டை நண்பனின் திருமண ஊர்வலம் மூலம் உடைக்கும் முத்துக்காளை, அந்தப் புரட்சியை பறையறைந்து அறிவிப்பார். அப்போது அந்தக் காட்சிக்கு இளையராஜா ஒற்றைப் பறையை மட்டும் பயன்படுத்தி இசையமைத்திருப்பார். காட்சியின் அந்த இசை ஒடுக்குமுறைக்கு எதிரான குரலாக ஓங்கி பதிவாகியிருக்கும்.

உண்மையும் புனைவும்: எண்பதுகளில் உள்ளுர் அரசியலையும், கிராமத்தில் நிலவும் சாதி, வர்க்க ஏற்றத்தாழ்வுகளையும் எதிர்த்து பேசத் தொடக்கிய தமிழ் சினிமா பத்தாண்டுகளுக்குள் அவற்றை கிராமத்தின் தனித்த கலாசாரமாகவே தூக்கி பிடிக்கத் தொடங்கியது காலமற்றத்தின் பெரும் சோகம். அம்பலத்தின் சாதிய தீண்டாமையை தட்டிக்கேட்கும் முத்துக்காளை, கொலைகுற்றத்திற்காக தண்டனை பெற்று கைதியாக அனுமதி பெற்று கோயில் திருவிழாவிற்கு வந்து அடுத்த அம்பலமாக ஊர்மரியாதை பெறும் போது, ஊர்மக்கள் துண்டை இடுப்பில் கட்டுவதை தடுக்காமல் அதனை முத்துக்காளை முத்துக்காளை ஏற்றுக்கொள்ளுவார். அந்த வகையில் இயக்குநர் ராஜ்கபூரின் இரண்டாவது படமாக 1992-ம் ஆண்டு வெளி வந்த ‘சின்ன பசங்க நாங்க’ படம் அந்த தமிழ் சினிமாவின் 90-களின் பயணத்திற்கு பாதை அமைத்தது என்றால் மிகையில்லை என்றே சொல்லவேண்டும்.

தற்கால தமிழ் சினிமாவில் வடிவேலுவின் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ தவிர்த்து, சிலுக்குவார்பட்டியில் சிவகார்த்திகேயனின் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘நையாண்டி’ படத்தில் தனுஷ் வைத்திருக்கும் ‘வாலிபர் சங்கம்’ என இரண்டு சங்கங்களைப் பற்றிய பதிவுகள் இருக்கின்றன. இந்த இரண்டு சங்கங்களின் உறுப்பினர்களும் தங்களின் சுயலாப பிரச்சினைகளுக்காவே போராடினார்கள். ஆனால், உள்ளூர் மக்களின் பிரச்சினைகளுக்காக போராடிய பாவலர் வரதராஜன் மன்றத்தின் ‘சின்ன பசங்க’ அன்றைய கிராமத்தின் கதையை படம் பிடித்திருந்தனர்.

பின்குறிப்பு: கிராமங்கள் என்பது வெறும் பச்சை போர்த்திய பசுமையோ, பாளங்களாய் வெடித்திருக்கும் வறண்ட பூமி மட்டும் இல்லை. ஒரு கிராமம் பல்வேறு நுண்ணிய கலாசாரக்கூறுகளை தனக்குள்ளே உள்ளடக்கி இருக்கிறது. அவற்றை தமிழ் சினிமாவின் வழியாக தேடி பயணிப்பதே ‘சினிமாபுரம்’ தொடரின் நோக்கம். அதனால் சினிமாவின் கதைக்களத்தை மட்டுமே கட்டுரைகள் பேசுகிறது. ஆனால், எண்பதுகளின் சினிமா என பேசும்போது இளையராஜவை தவிர்க்க முடியாது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே! குன்றின்மேலிட்ட விளக்கிற்கு வெளிச்சம் எதற்கு என்றே முந்தைய அத்தியாயமான ‘சின்னத்தாயி’ படத்தின் இசை குறித்து எழுத தவறிவிட்டேன். இளையராஜாவின் இசையை தவிர்த்து விட்டு கிராமத்து சினிமாவை பேச முடியாது என்பது நிதர்சனம்.

> முந்தைய அத்தியாயம்: சினிமாபுரம் - 1 | சின்னத்தாயி - கடவுளையும் கேள்வி கேட்கலாம் என உணர்த்தியவளின் கதை!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x